காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை: மரங்கள் மாநாட்டில் தவெகவை தாக்கி பேசிய சீமான்

Meenakshi
Aug 30, 2025,04:36 PM IST

சென்னை: காட்டுக்குள் புலிகள் நுழைந்தவுடன், ஒரு அணில்கூட கண்ணில்படவில்லை. அந்த அணில்களுக்கும் சேர்த்து காடு வளர்க்கதான் நாம் பாடுபடுகிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பனையேறும் தொழிலாளர்களுக்காக, கள் மீதான தடையை நீக்க கோரி பனை மரத்தில் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மேய்ச்சல் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தினார். கடந்த ஜூலை 10ம் தேதி மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற தலைப்பில் ஆடு மற்றும் மாடுகள் மாநாடு நடத்தினார்.




ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்! என்ற தலைப்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களின் மாநாடு நடத்தினார். இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பாக  மறைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நம்மாழ்வார், மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், நகைச்சுவை நடிகர் விவேக் உட்பட பலரின் நினைவாக மலரஞ்லி செலுத்தப்பட்டு, மரக் கன்றுகளை நட்டார்  அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 


அதன்பின்னர் அவர் பேசுகையில், காட்டுக்குள் புலிகள் நுழைந்தவுடன், ஒரு அணில்கூட கண்ணில்படவில்லை. அந்த அணில்களுக்கும் சேர்த்து காடு வளர்க்கதான் நாம் பாடுபடுகிறோம். மரங்களுக்கு என்ன மாடு இவர்களுக்கு என்ன மறை கழன்று விட்டதா? என்று கேட்பார்கள். மறையை கற்றதால் தான் இந்த மாநாடு. வாக்குக்காக நிற்பவர்கள் இதை நினைத்து கூட பார்க்க மாட்டார். மக்களின் வாழ்க்கைக்காக நிற்பவர்களால் தான் இந்த மாநாட்டை நடத்த முடியும். தண்ணீரை தொடர்ந்து காற்றையும்கூட இவர்கள் விற்பாளர்கள். டெல்லியை போல தமிழ்நாட்டிலும் சுத்தமான காற்றை குடுவையில் விற்கும் நிலைவரும்  என்று தெரிவித்துள்ளார்.