சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!

Su.tha Arivalagan
Mar 22, 2026,11:04 AM IST

- ஜோபிரபா, திருவாரூர்


ஒரு சாதாரண அரசு பஸ் கண்டக்டர்… 

ஆனால், ஒரு அசாதாரண மனிதன்.


ஒரு நாளில் நீங்கள் நினைத்துப் பாருங்கள்…


முகேஷ் அம்பானி நேரில் அழைத்து விருந்து கொடுக்கிறார்.

ஜான் ஆபிரஹாம் மேடையிலேயே அவரது கால்களைத் துடைத்து புதிய செருப்பு அணிவிக்கிறார்.

தலாய் லாமா தர்மசாலாவுக்கு அழைத்து மரியாதை செலுத்துகிறார்.

உதய்ப்பூர் மகாராஜா தனது அரண்மனையில் தங்க வைத்து, குடும்பத்தோடு அமர வைத்து உணவு அளிக்கிறார்…




இப்படி மரியாதை கிடைப்பது யாருக்கு…?


ஒரு பெரிய அரசியல்வாதிக்கா…?

ஒரு உலகப் புகழ் விஞ்ஞானிக்கா…?


இல்லை.


ஒரு பஸ் கண்டக்டருக்கு.

அவரின் பெயர் — யோகநாதன்.

ஊர் — கோயமுத்தூர்.


திருச்சி அருகிலுள்ள அத்தாணி…

அங்கிருந்த ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் யோகநாதன்.


இலங்கையில் தோட்டத் தொழிலாளிகளாக இருந்த குடும்பம்…

பின்னர் தமிழ்நாட்டுக்கு திரும்பி, நீலகிரி மலைப்பகுதியில் குடியேறியது.


அங்கிருந்த காடுகள்… பசுமை… மரங்கள்…

அவை யோகநாதனின் வாழ்க்கையை மாற்றின.


ஒரு நாள்…


லாரி லாரியாக மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவது…

அது ஒரு குழந்தையின் மனதை கிழித்தது.


அந்தச் சிறுவன் என்ன செய்தான் தெரியுமா?


கலெக்டருக்கு கடிதம் எழுதினான்.

யாரும் கவனிக்கவில்லை.


அவன் விட்டுவிட்டானா…?


இல்லை.


ஒரு நாள், மரங்களை ஏற்றி சென்ற லாரியின் முன்…

நடுரோட்டில் படுத்துக் கொண்டான்.


“மரத்தை வெட்டாதே!” என்று கத்தினான்.


அவன் அடிக்கப்பட்டான்…

ஆனால் அந்த நாள் — ஒரு போராளி பிறந்த நாள்.




அதற்குப் பிறகு…


யோகநாதன் வாழ்க்கை ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தது —

இயற்கையை காப்பது.


கோத்தகிரியின் லாங்வுட் சோலை…

ஒரு சதுப்பு நிலக்காடு…


அதை கழிப்பிடமாக பயன்படுத்திய நிலைமையிலிருந்து,

இன்று 15 கிராமங்களுக்கு தண்ணீர் தரும் காடாக மாற்றியது —

யோகநாதன் மற்றும் அவரது குழு.


பள்ளி, கல்லூரி, கிராமம்…


எங்க போனாலும் —

மரம் நடுவது…

பசுமை பேசுவது…

விழிப்புணர்வு ஏற்படுத்துவது…


அது தான் அவரது வாழ்க்கை.


பின்னர் அவர் அரசு பஸ் கண்டக்டராக வேலைக்குச் சேர்ந்தார்.


ஆனா அந்த வேலை —

அவரின் அடையாளம் இல்லை.


பஸ் ஓட்டும் நேரம் தவிர்ந்தால்…

அவர் ஒரு “பசுமை போராளி”.


ப்ரொஜெக்டர் எடுத்துக்கொண்டு பள்ளிகளுக்கு செல்வார்…

மரக்கன்றுகளை குழந்தைகளிடம் நட்டுவைப்பார்…


எங்காவது மரம் வெட்டினால் —

பஸ் நிறுத்தி எதிர்ப்பார்.


இதற்காக என்ன கிடைத்தது…?


மர மாஃபியாவின் மிரட்டல்கள்…

அதிகாரிகளின் அழுத்தங்கள்…

27 டிரான்ஸ்பர்கள்…


ஆனா அவர் நின்றாரா…?


இல்லை.


ஒரு கட்டத்தில் உலகமே அவரை கவனித்தது.


துணை குடியரசு தலைவர்  ஹமீத் அன்சாரி அவருக்கு தேசிய விருது வழங்கினார்.


அம்பானி அவரை “Unsung Hero” என்று மேடையில் அறிமுகப்படுத்தினார்.


ஜான் ஆபிரஹாம் —

அவரின் கால்களைத் துடைத்து மரியாதை செய்தார்.


அவருக்கு விருதுகள் வந்தது…

பணம் வந்தது…

புகழ் வந்தது…


ஆனால் அவர் மாறினாரா…?


இல்லை.

தொடர்ந்து மரங்கள், இயற்கை என்று ஓடி கொண்டிருந்தவருக்கு,

ஒரு நாள் — நுரையீரல் புற்றுநோய்.

மரணம் அருகில் வந்தது.


ஆனால் நண்பர்கள் கைவிடவில்லை.

அவர் மீண்டு வந்தார்.


மீண்டும் என்ன செய்தார் தெரியுமா…?


மரம் நட்டார்.


இன்று அவர் ஓய்வு பெற்றவர்.


ஆனால் ஓய்வு எடுத்துவிட்டாரா…?


இல்லை.


இமாச்சல் முதல் குமரி வரை —

அவர் இன்னும் மரம் நட்டுக்கொண்டே இருக்கிறார்.


விருதுகளோ…

புகழோ…

பணமோ…


அவரை வரையறுக்காது.


ஒரு துண்டு…

ஒரு புன்னகை…

ஒரு மரக்கன்று…


அதுவே — யோகநாதன்.


உண்மையான ஹீரோக்கள் சினிமாவில் இல்லை… அவர்கள் நம்மை சுற்றிலும் தான் இருக்கிறார்கள்.


(திருவாரூர் அரசுப் பள்ளி ஆசிரியர் ஜோபிரபா என்கிற ச.பிரபாகரன், திருவாரூர் புத்தகத் திருவிழா இலச்சினையை வடிவமைத்தவர். தேனி புத்தகத் திருவிழா ஸ்லோகன் போட்டி மற்றும் 'விஞ்ஞான துளிர்' இதழின் கட்டுரையாளர். மேலும், தமிழ்நாடு அரசின் 'போதையில்லா தமிழ்நாடு', 'சமத்துவம் காண்போம்', 'என் பள்ளி என் பெருமை' போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்)