திருச்சி சமயபுரம் மாரியம்மன் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்
Apr 07, 2026,12:08 PM IST
- ஸ்வர்ணலட்சுமி
சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழா ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குனி 22 ஆம் நாள் கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் திரளாக வந்து கொடியேற்றத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சமயபுரம் மாரியம்மன் ஸ்தலத்தில் அஷ்டபுஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக, சிவ பதத்தில் விக்ரம சிம்மாசனத்தில் எழுந்தருளி மும்மூர்த்திகளை நோக்கி மாயா சூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், அம்மனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்விதமான தீவினைகளும் அணுகாமல்,நோய்கள் அணுகாமல், சகல சௌபாக்கியங்களும் கிடைக்க சமயபுரம் மாரியம்மன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடந்தோறும் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை பச்சை பட்டினி விரதம் மேற்கொள்கிறாள்.
இத்துணை சிறப்பு மிக்க பச்சை பட்டினி விரதம் பூரணம் அடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல்: கொடியேற்றுதல் முதல் திருநாள்.
காத்தல் :ரிஷப வாகன காட்சி ஐந்தாம் திருநாள்.
அழித்தல்: திருத்தேர் பத்தாம் திருநாள்.
மறைத்தல்: முத்து பல்லக்கு உற்சவம் பனிரெண்டாம் திருநாள்.
அருள் பாலித்தல் :தெப்பம் 13ம் திருநாள்.
இந்த ஐந்து தொழில்களையும் சித்திரை பெரும் திருவிழா நாட்களில், இங்கு அம்மன் அருள் புரிந்து வருவது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம் :
ஏப்ரல் ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவம் மாரியம்மன் தங்கக் கொடி மரத்திற்கு முன்பு எழுந்தருளி காட்சி அளித்தாள். இதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மேலும் பூஜைகளும் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க (ஓம் சக்தி பராசக்தி) கொடிமரத்தில் அம்மன் உருவப்படம் பதிந்த கொடி, ஏற்றப்பட்டது. பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றனர்.
அம்மன் ஊர்வல நிகழ்ச்சிகள்:
சமயபுரம் மாரியம்மன் கொடியேற்ற விழாவை தொடர்ந்து இரவு கேடயத்தில் எழுந்தருளி அம்மன் வலம் வந்து அருள் பாலித்தார். விழா நாட்களில் தினமும் அம்மன் காலையில் பல்லக்கிலும், இரவு சிம்மம், பூதம், அன்னம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 13ஆம் தேதி திங்கட்கிழமை குதிரை வாகனத்தில் அம்மன் வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்: ஏப்ரல் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
சமயபுரம் மாரியம்மன் அனைவருக்கும் அருள் புரிவாளாக. மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.