Trisha: போதுமா.. இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா?.. வதந்திகளுக்கு த்ரிஷா கொடுத்த பதிலடி

Su.tha Arivalagan
Apr 07, 2026,05:19 PM IST

தென்னிந்தியத் திரையுலகின் 'எவர்கிரீன்' நாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருகிறார். சமீபகாலமாக இவரைப் பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆதாரமற்ற வதந்திகளுக்கு, தனது டிரேட்மார்க் பாணியில் நக்கலாகவும், அதே சமயம் அதிரடியாகவும் த்ரிஷா பதிலளித்துள்ளார்.


கடந்த சில நாட்களாக நடிகை த்ரிஷா சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்றும், அவர் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரத் தொழிலதிபரைத் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் என்றும் செய்திகள் காட்டுத்தீயாகப் பரவின. அது மட்டுமின்றி ஒரு படி மேலே போய், அவருக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் சில யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் செய்திகளைப் பரப்பின.


இந்த வதந்திகளைக் கண்டு ஆத்திரமடையாமல், தனது நகைச்சுவை உணர்வால் அவற்றைப் பொய்யாக்கி உள்ளார் த்ரிஷா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட ஸ்டோரியில், "நான் சினிமாவில் இருந்து விலகிவிட்டேன், ஒரு கோடீஸ்வரத் தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டேன், நேற்றோடு இரண்டு வயதான நான்கு குழந்தைகளுக்கு நான் தாயாகிவிட்டேன் என்று கேள்விப்பட்டேன். இதோடு நான் வேறு எதையாவது சேர்க்க வேண்டுமா அல்லது இன்றைய புனைக்கதைகளின் அளவு இத்துடன் முடிந்துவிட்டதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். கூடவே, ஒரு யோசிப்பது போன்ற எமோஜியையும் சேர்த்துத் தனது கிண்டலை வெளிப்படுத்தியுள்ளார்.




திரைப்பயணத்தில் த்ரிஷா :


'பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா, சோழ இளவரசி குந்தவையாக நடித்திருந்தார். அஜித்துடன் 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி', கமலஹாசனுடன் 'தக் லைஃப்' படங்களை தொடர்ந்து, தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா', தமிழில் கருப்புமலையாளத்தில் ராம் உள்ளிட்ட பல பிரம்மாண்டமான படங்களில் அவர் நடித்து வருகிறார். இவ்வளவு பிஸியாக இருக்கும் ஒரு நடிகையைப் பற்றி, அவர் ஓய்வு பெறுகிறார் எனப் பரவிய செய்தி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.


சினிமா பிரபலங்களைப் பற்றி இது போன்ற வதந்திகள் வருவது சாதாரணமானது என்றாலும், எல்லை மீறிச் செல்லும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க த்ரிஷா எடுத்த இந்த முடிவு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. "வதந்திகளைப் பரப்புபவர்களுக்குத் தகுந்த பதிலடி இதுதான்" என அவரது ரசிகர்கள் இந்தத் தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த விளக்கத்தின் மூலம், த்ரிஷா தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்பதும், திருமணம் குறித்த செய்திகள் அனைத்தும் வெறும் 'கற்பனை' என்பதும் உறுதியாகியுள்ளது.