இந்தியாவுக்குப் புதிய சிக்கலா? 500% வரி விதிப்பு மசோதாவிற்கு டிரம்ப் ஆதரவு

Su.tha Arivalagan
Jan 08, 2026,06:02 PM IST

நியூயார்க் : ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளைத் தண்டிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய தடை உத்தரவு மசோதாவிற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பச்சைக்கொடி காட்டியுள்ளார். இதன் மூலம் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 500 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்காவிற்கு அதிகாரம் கிடைக்கும்.


குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம், புதன்கிழமை அதிபர் டிரம்பை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, ரஷ்யா மீதான தடை உத்தரவு மசோதாவை (Sanctioning Russia Act of 2025) டிரம்ப் ஏற்றுக் கொண்டதாக கிரஹாம் தெரிவித்தார்.இந்த மசோதாவின்படி, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், இயற்கை எரிவாயு, யுரேனியம் அல்லது பெட்ரோலியப் பொருட்களைத் தொடர்ந்து வாங்கும் எந்தவொரு நாட்டிற்கும் எதிராக 500% வரை சுங்க வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.




ரஷ்யாவின் எரிசக்தித் துறையைச் சார்ந்து இருக்கும் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளை இந்த மசோதா நேரடியாகக் குறிவைக்கிறது. இந்த நாடுகள் மலிவு விலையில் ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதன் மூலம், உக்ரைன் போருக்கான நிதியை புதினுக்கு மறைமுகமாக வழங்குகின்றன என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு.


உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அழுத்தத்தை அதிகரிக்கவும், ரஷ்யாவைத் தனிமைப்படுத்தவும் இந்த நடவடிக்கை அவசியமானது என டிரம்ப் கருதுகிறார். சமீபத்தில் பிரதமர் மோடி குறித்துப் பேசிய டிரம்ப், "இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை" என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.


இந்த மசோதா அடுத்த வாரமே அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சட்டமானால், ஏற்கனவே அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நிலவும் வர்த்தகப் போர் (Tariff War) மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி மற்றும் இதர விவசாயப் பொருட்கள் கடுமையாகப் பாதிக்கப்படலாம். அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவு, புது தில்லி மற்றும் வாஷிங்டன் இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.