வெனிசுலா அதிபர் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தல்...டிரெம்ப் அறிவிப்பு
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டதாக இன்று அறிவித்துள்ளார். கராகஸ் நகரில் "பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல்கள்" நடத்தியதாக அவர் கூறினார். இதனால் வெனிசுலாவில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலா தலைநகர் காரகாஸ் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்கப் படைகள் சிறைபிடித்துள்ளதாக அவர் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார். காரகாஸ் நகரில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் முக்கிய ராணுவ நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது.
தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் இது குறித்து பதிவிட்ட டிரம்ப், "மதுரோவும் அவரது மனைவியும் இப்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார். வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.மதுரோ மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்கள் மீது சர்வதேச சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களால் காரகாஸ் நகரில் கடும் பதற்றம் நிலவுகிறது. வெனிசுலா ராணுவத்தின் ஒரு பகுதி இந்த நடவடிக்கையை எதிர்த்தாலும், முக்கியப் பகுதிகளில் அமெரிக்க ஆதரவுப் படைகள் முன்னேறி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் உலக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகள் இந்த திடீர் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன.
கடந்த வாரம், வெனிசுலா போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு துறைமுகத்தில் சி.ஐ.ஏ. ஒரு ட்ரோன் தாக்குதலை நடத்தியது. செப்டம்பர் மாதம் சந்தேகத்திற்கிடமான கடத்தல் படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தத் தொடங்கியதிலிருந்து வெனிசுலா மண்ணில் இதுவே முதல் வெளிப்படையான நேரடி அமெரிக்க நடவடிக்கை ஆகும். ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்க இராணுவம் செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் கடலில் உள்ள படகுகள் மீது குறைந்தது 35 முறை தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் குறைந்தது 115 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.