ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்.. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலை தாக்குதல்!
டோக்கியோ/மாஸ்கோ: மிகப் பெரிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.
இன்று அதிகாலையில் ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் வடக்கு பசிபிக் பிராந்தியத்தில் சுனாமி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அலாஸ்கா, ஹவாய் மற்றும் நியூசிலாந்து வரையிலான பிற கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
ஹொனலுலுவில் செவ்வாய்க்கிழமை சுனாமி எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. இதையடுத்து மக்கள் உயரமான பகுதிகளுக்கு நகர்ந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைத் தாக்குதல் ஜப்பானிலும் தாக்கியுள்ளது. ஜப்பானின் முக்கிய தீவுகளில் வடக்கே உள்ள ஹொக்கைடோவின் தெற்குக் கடற்கரையில் உள்ள டோகாச்சியில் 40 சென்டிமீட்டர் (1.3 அடி) உயரமுள்ள சுனாமி தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பப் பகுதியில்தான் நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. இதனால் இந்தப் பகுதியில், சேதம் அதிக அளவில் இருப்பதாக தெரிகிறது. பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ரஷ்யாவின் பசிபிக் பெருங்கடலில் உள்ள குரில் தீவுகளின் முக்கிய பகுதியான செவெரோ-குரில்ஸ்க் கடற்கரைப் பகுதியில் முதல் சுனாமி அலை தாக்கியதாக மாகாண ஆளுநர் வலேரி லிமாரென்கோ தெரிவித்தார். ஹவாய் பகுதியில் சுனாமி அலைத் தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நேரப்படி காலை 8:25 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ஜப்பான் மற்றும் அமெரிக்க நிலநடுக்கவியலாளர்களின் தகவலின்படி 8.0 ரிக்டர் ஆகப் பதிவானது. பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அதன் அளவீட்டை 8.8 ஆகப் உயர்த்தியது.
கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் 9.0 ரிக்டர் அளவுக்கு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது இந்த நிலநடுக்கம் மிகப் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.