'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை

Su.tha Arivalagan
Jan 08, 2026,06:02 PM IST

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


சமீபத்தில் அரசு ஊழியர்களுக்காக உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை ஏற்று ஜனவரி 06ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளதாக இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு ஆதரவும், எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. இந்த அறிவிப்பு ஏமாற்று வேலை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை தெரிவித்திருந்தார். 




திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாக அறிவித்திருந்தது. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள டிடிவி தினகரன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme) அமல்படுத்துவதே ஒரே நிரந்தர தீர்வாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.


தமிழக அரசால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 'தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்' பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.பல்வேறு தரப்பிலிருந்து எழும் எதிர்ப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அரசு ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அமமுக நிலைப்பாடாக உள்ளது.


தமிழகத்தில் ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நிலவி வரும் அரசியல் விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் புதிய திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், டிடிவி தினகரனின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.