முருகனின் 2ம் படை வீடான.. திருச்செந்தூரில் ஜூலை 7 கும்பாபிஷேகம்.. போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
திருச்செந்தூர்: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக கருதப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். இக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 07ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
ஜூலை 07ம் தேதி காலை 06.15 மணி முதல் 06.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என ஏற்கனவே கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து திருச்செந்தூருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஜூலை 04ம் தேதி துவங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்கள் உள்ளிட்ட பொது மக்களுக்கு புதிய வழிகாட்டு விதிமுறைகள் போலீசார் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் நடக்கும் நாட்களான ஜூலை 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்கள் அத்தியாசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தவிர, தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கும், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கும், உவரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருச்செந்தூருக்கும், சாத்தான்குளத்தில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கும் மற்றும் திருச்செந்தூர் வழியாக செல்லும் இலகு ரசக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. எனவே திருச்செந்தூர் வருவதை தவிர்த்து மாற்று பாதையில் செல்லவும்.
மேலும், திருச்செந்தூர் கோவிலுக்கு வருபவர்களை தவிர்த்து, ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி வந்து திருச்செந்தூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக உவரி மார்க்கமாக கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்லும் தனியார் வாகனங்களும், கன்னியாக்குமரி, உவரி, திருச்செந்தூர் (கிழக்கு கடற்கரை சாலை) வழியாக தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் வாகனங்களும் திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய ஊர்களில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூரை கடந்து செல்லும் வாகனங்களும் திருச்செந்தூர் (கிழக்கு கடற்கரை சாலை) பாதையை தவிர்த்து வேறு மாற்று பாதையில் செல்லவும். எனவே பொது மக்கள் அனைவரும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.