விஜய் போட்ட சூப்பர் ஸ்கெட்ச்.. மதுரை மாநாட்டு தேதி ஸ்பெஷல்.. விஜயகாந்த் பிறந்த நாள் + கல்யாண நாள்!

Su.tha Arivalagan
Jul 16, 2025,11:39 AM IST

மதுரை: மதுரையில் தனது கட்சியின் 2வது மாநில மாநாட்டை நடத்த விஜய் தேர்ந்தெடுத்த தேதி தற்போது பேசு பொருளாகியுள்ளது.


தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செயல்பாடுகள் வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளன. கட்சி ஆரம்பித்து தீவிர அரசியலில் இதுவரை விஜய் குதிக்கவில்லை. ஒரு சில நிகழ்வுகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார். ஆனால் விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநில மாநாட்டின்போது ஆரம்பித்து வைத்த அந்த பரபரப்பு கொஞ்சம் கூட குறையாமல் தொடர்ந்து அனல் தகித்தபடிதான் உள்ளது.


எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்கள், பல்வேறு பரிமுகர்களின் பரிகாசங்கள், கிண்டல்கள், வசவுகள் என எல்லாவற்றையும் அமைதியாக எதிர்கொண்டு வரும் விஜய், எதையும் கண்டு கொள்ளாமல் தனது பாதையில் தெளிவாக போய்க் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தனது கட்சியின் 2வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த முடிவு செய்துள்ளார் விஜய். ஆகஸ்ட் 25ம் தேதி தவெக மாநாடு மதுரையில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. பந்தக்காலுக்கான கால்கோள் விழாவும் நடத்தப்பட்டு விட்டது.




இதனால் தென் மாவட்ட விஜய் கட்சியினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். இப்போதே சமூக வலைதளங்களை தடபுடலாக கொண்டாடி வருகின்றனர். விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநில மாநாட்டின்போது கூடிய கூட்டமே இன்னும் அயர்ச்சியைத் தந்து வரும் நிலையில் மதுரையில் எப்படி கூட்டம் கூடப் போகிறதோ என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


இதற்கிடையே, இந்த மாநாட்டுக்கான தேதி தற்போது பேசு பொருளாகியுள்ளது. அதில் என்ன விசேஷம் என்றால் இதே தேதியில்தான் கேப்டன் விஜயகாந்த் பிறந்தார் என்பதுதான். அதாவது விஜயகாந்த் பிறந்த நாளன்றுதான் மதுரையில் தவெக 2வது மாநில மாநாடு நடைபெறப் போகிறது. இதனால் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த மாநாட்டை அவர் பிறந்த மதுரையில் அதே தேதியில் விஜய் நடத்தத் திட்டமிட்டாரா என்ற சுவாரஸ்யம் எழுந்துள்ளது.


அதேபோல இந்தத் தேதியில் இன்னொரு விசேஷமும் அடங்கியுள்ளது. அது விஜய்யின் கல்யாண நாள் (1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25). இதே தேதியில்தான் விஜய் - சங்கீதா திருமணம் நடந்தது. இந்த இரண்டையும் வைத்து இப்போது சமூக வலைதளங்களில் விஜய் கட்சியினர் கருத்துக்களைப் பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.