சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; விஜய் பதிவு

Meenakshi
Feb 02, 2026,01:04 PM IST

சென்னை: சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க. என்று தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.


சினிமா துரையில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த விஜய் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். அதன்பின்னர் கட்சிப் பணிகளை ஒவ்வொன்றாக செய்து வரும் விஜய், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் போட்டி இட திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தவெக கட்சியின் 3ம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சி அலுவலத்தில் நடைபெற்று வருகிறது.


இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம்.




நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.


முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள்.


ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க.


2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம். 


நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என்று பதிவிட்டுள்ளார்.