2026 சட்டசபைத் தேர்தல்: விஜய்தான் முதல்வர் வேட்பாளர் .. பாஜகவுடன் கூட்டணி கிடையாது.. தவெக அதிரடி!
சென்னை: 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் தான். கூட்டணி தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கே அதிகாரம் என தவெக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கி நடத்தி வருகிறார். 2026ம் ஆண்டு தேர்தலில் தான் தவெக கட்சி களம் காணும் என்று தவெக தலைவர் விஜய் முன்னரே அறிவித்திருந்தார். அதன்படி கட்சிப்பணிகளை ஒவ்வொன்றாக செய்து வருகிறார். விஜய். தவெகவின் முதல் மாநாட்டை விஜய் விக்கிரவாண்டி வி சாலையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தினார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆகஸ்ட்டில் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு நடைபெறும் என்றும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை விஜய் சுற்றுப்பயணம் நடைபெறும் என்றும் . சட்டமன்றத் தேர்தலில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்றும். கூட்டணி தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு தான் முழு அதிகாரம் போன்ற பல முக்கிய தீர்மானங்கள் தவெக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விஜய்யை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விஜய் வர வாய்ப்பில்லை. விஜய் கட்சியின் அதிரடி முடிவால் அதிமுக - பாஜக கூட்டணிக்கு கடும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. விஜய்யின் இந்த அறிவிப்பால் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 4 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. 2026 தேர்தலில் 4 முக்கிய கூட்டணிகளாக திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக போட்டியிடுகின்றன.