234 தொகுதிகளிலும் தவெக தனி ஆவர்த்தனம்.. வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான 234 வேட்பாளர்களின் பட்டியலை இன்று முறைப்படி வெளியிடுகிறார்.
தேமுதிக ஆரம்பித்தபோது அக்கட்சியின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டார். பின்னர் அது கூட்டணி அரசியலுக்குப் போய் விட்டது. அதன் பிறகு நாம் தமிழர் கட்சிதான் இதுவரை 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு வருகிறது. அந்தக் கட்சிக்குப் பிறகு அந்த வரலாற்றைப் படைக்கவுள்ளார் விஜய்.
ஏற்கனவே தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், விஜய்யின் இந்த அதிரடி அறிவிப்பு தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.
எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடுகிறது. விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதற்காக அந்தத் தொகுதியில் தேர்தல் அலுவலகப் பணிகள் ஏற்கனவே தீவிரமடைந்துள்ளன.
தவெக அரசியல் களத்திற்குப் புதிது என்பதால் அதன் வேட்பாளர்களும் புதியவர்களாகவே அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளது. இந்தப் பட்டியலில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, கல்வி மற்றும் சமூகப் பணியில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு விஜய் வாய்ப்பளித்துள்ளதாகத் தகவல்.
புதுச்சேரியிலும் தவெக தனித்தே போட்டியிடுகிறது. மார்ச் 22 அன்று புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விஜய் முதற்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ்நாட்டில் விஜய் அறிவிக்கப் போகும் வேட்பாளர்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.