தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

Su.tha Arivalagan
Oct 03, 2026,02:11 PM IST

சென்னை: தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, தங்கள் கட்சியின் பெண் வேட்பாளரை உருவக்கேலி (Body Shaming) செய்து இழிவுபடுத்தி பேசியதாக, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்குரைஞர் பிரிவு சார்பில் காவல் துறை மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டு உள்ளது.   


தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக சார்பில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் வேட்பாளரான சத்தியபாமா குறித்துப் பேசும் போது, அவரை உருவக்கேலி செய்தும் இழிவுபடுத்தும் விதமாகவும் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 


இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்குரைஞர் பிரிவு சார்பில் காவல் துறைத் தலைமை இயக்குநர் (DGP), சென்னை மாநகர காவல் ஆணையர், தலைமைத் தேர்தல் அதிகாரி, தாராபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருப்பூர் மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு விரிவான புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.   




தமிழக வெற்றிக் கழக வழக்குரைஞர் பிரிவு சமர்ப்பித்துள்ள அந்தப் புகாரில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாகப் பல்வேறு கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.   குறிப்பாக தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடைச் சட்டம், 1998 (Tamil Nadu Prohibition of Harassment of Woman Act, 1998)   பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (Bharatiya Nyaya Sanhita, 2023)   மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (Representation of the People Act, 1951)  ஆகிய சட்டங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், கண்ணியக் குறைவு மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறுதல் போன்ற செயல்களுக்குரிய பொருத்தமான பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.   


மேலும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் முறையான சட்டப்படியான விசாரணையை உடனடியாகத் தொடங்கி, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் மீது உரிய தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தவெக சார்பில் மிக அழுத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் அளித்துள்ள இந்தத் தொடர் புகார் மனு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.