சிங்கம் வேட்டைக்குத்தான் வெளியே வரும்.. தனித்து வந்தாலும் தைரியமாக வரும்.. விஜய்

Su.tha Arivalagan
Aug 21, 2025,05:32 PM IST

சென்னை: சிங்கம் வேட்டைக்குத்தான் வெளியே வரும். வேடிக்கை பார்க்க வராது. கூட்டத்தோடும் வரத் தெரியும். தனித்தும் வரத் தெரியும். தனித்து வந்தாலும் தைரியமாகவே வரும் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.


மதுரை தவெக 2வது மாநில மாநாட்டில் விஜய் பேசிய பேச்சிலிருந்து:


சிங்கம் ஒருமுறை கர்ஜித்தால் 8 கிலோமீட்டருக்கு அதிரும். எல்லாத் திசையும் அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளியே வரும். வேடிக்கை பார்க்க வராது. வேட்டையில் கூட உயிருள்ள மிருகங்களைத்தான் வேட்டையாடும், தன்னை விட பெரிய மிருகங்களைத்தான் குறி வைத்துத் தாக்கும் ஜெயிக்கும். பசியில் இருந்தாலும் உயிரோடு இல்லாதது, கெட்டுப் போனதை தொட்டுக் கூட பார்க்காது. அப்படிப்பட்ட சிங்கம் அவ்வளவு சீக்கிரம் எதையும் தொடாது, தொட்டா விடாது. காட்டோட மார்க்கிங் மை டெரிட்டரி என்று தானே எல்லையை வகுக்கும். 




சிங்கத்துக்கு கூட்டத்தோடு இருக்கவும் தெரியும், தனியா இருக்கவும் தெரியும். தனியாக வர நினைத்தால் அசராமல் அலட்டிக்காம சும்மா கெத்தா தனியா வந்து தண்ணி காட்டும். எப்போதும் தனது தனித்தன்மையை இழக்காது. எ லயன் இஸ் ஆல்வேஸ் எ லயன். காட்டில் பல விலங்குகள் இருக்கும் ஆனால் சிங்கம் ஒன்றுதான். சிங்கம் தனித்து இருந்தாலும் காட்டின் ராஜாவும், ராணியும் அதுதான். 


சிங்கத்தைப் பத்தி பேசி விட்டு, சிங்கக்குட்டிகளையும், சிங்கப் பெண்களையும் பற்றி எப்படி பேசாமல் இருக்க முடியும். என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் நேரில் வர முடியாத சூழலில் வீட்டில் இருந்தபடி நேரலை வாயிலாக கலந்து கொண்டிருக்கும் அம்மாக்கள், அண்ணன் தம்பிகள்,அக்கா தங்கைகள் அனைவருக்கும் வணக்கம்.


வீரம் விளையும் மாமதுரை மண்ணை வணங்குகிறேன். மதுரை என்றாலே உடனே ஞாபகத்துக்கு வருவது சீறிப் பாயும் காளைகள் விளையாடும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான். வைகை ஆறுதான். அழகர் ஆற்றில் இறங்கும் வைபம், மீனாட்சி அம்மன் கோவில்தான். இந்த மண்ணின் உண்மையான குணம் இது. மக்களும் அப்படித்தான் உணர்வுப்பூர்வான ஆட்கள். இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்தபோது ஒருவர் மட்டுமே மனதில் இருந்தார். 


புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் நான் பழகியதில்லை. ஆனால் அவரைப் போன்ற குணம் வாய்ந்த என்னோட அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் தான் நினைக்கு வருவார். அவருடன் பழகுவதற்கு நிறையவே வாய்ப்புக் கிடைத்தது. அவரும் மதுரை மண்ணைச் சேர்ந்தவர்தான். அவரை மறக்க முடியுமா. மக்கள் உணர்வுப்பூர்வாக உடன் இருப்பவர்கள். அதுதான் மதுரை மண்.




நல்லரசியல், நல்லவர்களுக்கான அரசியல் நல்லது மட்டுமே செய்யும் அரசியல் இதைத்தான் நாம் கையில் எடுத்திருக்கிறோம். வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. 2026ல் அப்படி ஒரு வரலாறு திரும்பப் போகிறது என்பதை உறுதியாக சொல்லப் போகும் மாநாடுதான் இந்த 2வது மாநில மாநாடு. விக்கிரவாண்டி வி சாலை முதல் மாநாடு கொள்கைத் திருவிழா. தமிழக அரசியல் தட்பவெப்பத்தை மாற்றியது. அதன் பிறகு எத்தனை குரல்கள். எந்தக் குரலையும் காதிலேயே போட்டுக்காம மக்களோட குரலை மட்டுமே கேட்டு்க கொண்டு நமக்கு எதிரான அத்தனை கூக்குரலையும் புன்னகையுடன் கடந்து வந்திருக்கிறோம்.


இங்கு ஒலிப்பது மதுரை மண்ணின் குரல் அல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குரல். ஒவ்வொரு தமிழ் வீட்டிலிருந்தும் எழும் குரல். சாதி, இனம், மொழி, பாலினம் கடந்து ரசிகர்களாக இருந்து தோழர்களாக பயணிக்கும் உங்களிடமிருந்து வரும் உரிமைக் குரல். மாநில உரிமை, சமூக சமநீதிக்காக, மதச்சார்பின்மைக்காக உண்மையாக ஒலிக்கும் குரல். எதிராக எத்தனை கூக்குரல்கள் வந்தாலும் ஒரு நாளும் ஓயாது. மேலும் மேலும் ஒங்கி ஒலிக்குமே தவிர ஓயாது.


நம்முடை ஒரே கொள்கை எதிரி பாஜகதான், அரசியல் எதிரி திமுகதான். ஊரை ஏமாத்தும் கட்சி நாம கிடையாது. கூட்டணி வைத்து ஏமாற்றும் கட்சி நாம் அல்ல. மாபெரும் இளைஞர் சக்தி நம்முடன் இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் நம்முடன் இருக்கிறது. எல்லோருக்குமான ஆட்சி அமைப்பதே நமது நோக்கம். பாஜகவுடன் கூட்டணி வச்சுக்க நாம் என்ன உலக மகா ஊழல் கட்சியா என்ன.


நாம இந்தியாவின் மாபெரும் சக்தி கொண்ட வெகுஜன மக்கள் படை. அடிமைக் கூட்டணியில் சேர வே்ண்டிய அவசியம் நமக்கு இல்லை. நம்முடையது சுயமரியாதை கூட்டணியாகவே இருக்கும். மக்களை ஏமாற்றும் கூட்டணி நம்முடையது அல்ல. நம்மை நம்பி வருவோருக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருவோம். உடனே கேள்வி வரும். 2026ல் இரண்டு பேருக்கு நடுவேதான் போட்டியே. ஒன்று டிவிகே.. இன்னொன்று டிஎம்கே. கூட்டணியை வைத்து எப்படியாவது தப்பிடலாம். அறுதப் பழசான மேத்தமேட்டிக்ஸ் வைத்து தப்பலாம் என்று நினைப்போரின் கனவு ஒரு நாளும் பலிக்காது.


மக்கள் அரசியல் என்ற சவுக்கை எடுப்போம். மறைமுக உறவுக்காரர்களான பாசிச பாஜகவும், பாய்சன் திமுகவுக்கும் எதிராக எடுப்போம். மக்களுக்கு நன்மை செய்யத்தானே மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்தார். தமிழ்நாட்டு மீனவர்கள் 800 பேருக்கு மேல் இலங்கை கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவை எங்களுக்கு  மீட்டுக் கொடுங்க அது போதும். முரட்டுப் பிடிவாதத்தால் நீங்க நடத்தும் நீட் தேர்வு தேவையில்லைன்னு அறிவிச்சிடுங்க. செய்வீங்களா மோடி ஜி அவர்களே.


ஆட்சி அதிகாரத்தை மட்டும் பெற்றுக் கொண்டு மக்களை மிரட்டும் பாசிச பாஜக கூட்டணி ஒன்று. இன்னொன்று ஆர்எஸ்எஸ் அடிமைக் கூட்டணி. இவர்கள் என்னதான் நேரடியாகவோ,  மறைமுகமாகவோ கூட்டணி போட்டாலும் தாமரை இலை மீது தண்ணீரே ஒட்டாது. தமிழக மக்கள் மட்டும் ஒப்படி ஒட்டுவாங்க. தமிழக மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஓர வஞ்சனை செய்கிறது பாஜக அரசு. மத நல்லிணக்கத்திற்குப் பெயர் போன மதுரையிலிருந்து சொல்கிறேன். உங்க எண்ணம் ஒரு நாளும் நிறைவேறாது.


எம்ஜிஆர் மாஸ் தெரியுமா.. அவர் உயிரோடு இருந்தவரை சிஎம் சீட்டைகனவில் கூட ஒருவரால் நினைக்க முடியவில்லை. எதிரியைக் கூட மக்களிடம் கெஞ்ச வைத்தவர் எம்ஜிஆர். அவர் ஆரம்பித்த கட்சியை கட்டிக் காப்பது யாரு. இன்னிக்கு அந்த கட்சி எப்படி இருக்கு. அப்பாவித் தொண்டர்கள் அதைச் சொல்ல முடியாமல் வேதனையில் தவிக்கிறார்கள். பொருந்தாக் கூட்டணியாக பாஜக கூட்டணி இருப்பதால், உள்ளுக்குள் திமுக உறவு வைத்துக் கொண்டு, வெளியில் டிராமா போட்டுக் கொண்டுள்ளது. ஒரு ரைடு வந்து விட்டால் போதும், இதுவரைக்கும் போகவே போகாத மீட்டிங்குக்காக டெல்லிக்குப் போவது. அதற்குப் பிறகு அந்த ரைடு காணாமல் போயிருக்கும். ஸ்டாலின் அங்கிள்.. இது ராங் அங்கிள். இந்த ஆட்சியின் லட்சணத்தைப் பார்த்துக் கொண்டு நாம் எப்படி சும்மா இருக்க முடியும்.


நீங்க நடத்தும் ஆட்சியில் நியாயம் இருக்கா. நேர்மை இருக்கா. ஊழல் இல்லாத ஆட்சியா இது இருக்கா. பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கா. சொல்லுங்க மை டியர் அங்கிள். டாஸ்மாக்கில் ஊழல் நடப்பதாக சொல்கிறார்கள். அதில் மட்டுமா ஊழல்..  எல்லாவற்றிலும்தானே இருக்கு. பெண்களுக்கு 1000 கொடுத்து விட்டால் போதுமா அங்கிள். படிக்கிற இடத்துல, வேலைக்குப் போற இடத்துல, வெளியில் போகும் இடத்துல பாதுகாப்பே இல்லையே. அவர்கள் கதறுகிறார்கள். அது உங்க காதுல கேட்குதா அங்கிள். பெண்களுக்கு மட்டுமா, அரசு ஊழியர்கள், மீனவர்கள், மாணவர்கள் என எல்லோருக்குமே ஏமாற்றம்தான்.


கூடிய சீக்கிரம் மக்களை சந்திக்கப் போகிறேன். அதற்குப் பிறகு இந்த சத்தம் இடி முழக்கமா மாறும். அது பிறகு போர் முழக்கமாக மாறும். அது உங்களைத் தூங்க விடாது. ஒவ்வொரு வீட்டுக்கும் போன பிறகுதான் கட்சியையே ஆரம்பிச்சிருக்கோம். அனைவரும் சேர்ந்து 2026 தேர்தலில் இந்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புறோம்.


உங்களுக்கு ஒரு சர்ப்பிரைஸ் மதுரை கிழக்கு வேட்பாளர் விஜய், மதுரை மேற்கு விஜய்.. தமிழ்நாட்டின்  234 தொகுதியிலும் உங்கள் விஜய்தான் வேட்பாளராக நிற்கப் போகிறார்கள். 


நான் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை, படைக்கலனோட வந்திருக்கோம். எல்லாத்துக்கும் தயாராகவே வந்திருக்கோம். அரசியலுக்கு வர இன்னரு காரணம். நன்றிக் கடன். 30 வருடத்துக்கு மேல என்னுடன் இருக்கீங்க. தாங்கிப் பிடிக்கிறீங்க. தாயன்போடு மடியில் ஏந்திக்கறீங்க. வேற யாரை விடவும் அன்பைக் கொடுத்திருக்கீங்க. உங்க வீட்டில் ஒருவராகவே மாத்திட்டீங்க. நீங்க கடவுள் கொடுத்த வரம். அப்படிப்பட்ட மக்களை நான் எப்படி மறப்பேன்.


என் கடன் இனி மக்களுக்கு பணி செய்து கிடப்பதே.  மக்களுக்கு ஒன்றே ஒன்றை சொல்கிறேன். உங்கள் விஜய், உங்களுக்கான விஜய்,  சொல் அல்ல முக்கியம். செய்வதை சிறப்பாக செய்ய வேண்டும். நல்லது செய்வதற்கு மட்டும்தான் இந்த விஜய் என்றார் விஜய்.