விடியா ஆட்சியில் விலகாத இருள்: பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை பாதுகாப்பற்ற சூழல்: தவெக
சென்னை: "விடியல் தருவோம்" என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று முதியோர்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற ஒரு இருண்ட சூழலை உருவாக்கியுள்ளனர் என்று தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தவெக தரப்பில் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், விளாத்திகுளத்தின் அலறல் அடங்குமுன் அடுத்த கொடுமை அரங்கேறியுள்ளது. தமிழகத்தின் அமைதி மாவட்டமாக அறியப்படும் சேலத்தில், 66 வயது மூதாட்டி ஒருவரை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது.
தாயுள்ளம் கொண்ட ஒரு மூதாட்டிக்கு நேர்ந்த இந்த இழிவான செயல், ஒட்டுமொத்த தமிழகத்தையே தலைகுனியச் செய்துள்ளது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளின் மனமே திமுக அரசின் ஐந்தாண்டு அடையாளம் !
"விடியல் தருவோம்" என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று முதியோர்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற ஒரு இருண்ட சூழலை உருவாக்கியுள்ளனர்.
பட்டப்பகலில் வழிப்பறி, தொடர் கொலைகள் எனத் தொடங்கி, தற்போது 60 வயதைக் கடந்த மூதாட்டிகளைக் கூட விட்டுவைக்காத அளவிற்கு குற்றவாளிகள் துணிச்சலுடன் வலம் வருவது மட்டுமே திமுகவின் சாதனை.
இந்தக் குற்றச் செயல்களின் பின்னணியில் தமிழகத்தில் தடையின்றிப் புழங்கும் போதைப் பொருட்களின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தத் தவறியது இந்த அரசின் மிகப்பெரிய நிர்வாகத் தோல்வியாகும்.
போதையின் பிடியில் சிக்கியுள்ள இளைஞர்கள் தங்களின் நன்னெறியைத் தொலைத்துவிட்டு, இது போன்ற மிருகத்தனமான செயல்களில் ஈடுபடுவது சமூகச் சீரழிவிற்கு வழிவகுக்கிறது. காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர், விளம்பரங்களில் காட்டும் கவனத்தை மக்களின் பாதுகாப்பில் காட்டத் தவறிவிட்டார்.
ஸ்டாலின் அவர்களே.. உங்களுக்கு தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.