விஜய் பிரச்சாரத்தை எப்படி திட்டமிடலாம்.. தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று!
Jan 21, 2026,12:43 PM IST
சென்னை: தவெக தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அக்கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில், முதல் முறையாக தேர்தல் களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக்குழுவை தவெக தலைவர் விஜய் அமைத்தார். தவெக பிரச்சார குழுவில் கட்சியின் பொதுச் செயலாளர் என் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, உயர்மட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில், தவெக தேர்தல் பிரச்சாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இது குறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ளும் குழுவை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்கள். இந்தக் குழு, நாளை (21.01.2026 புதன்கிழமை) மாலை 4.00 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பிரசாரக் குழுவினர் மட்டுமே பங்கேற்பார்கள் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.