தவெக தலைமை அறிவிப்பு: அனுமதி இன்றி ஊடக விவாதங்களில் பங்கேற்க நிர்வாகிகளுக்குத் தடை!
சென்னை: தவெக தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது என்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் களம் காண தயாராகி வருகிறது விஜய்யின் தமிழக முன்னேற்ற கழகம். முதல் முறையாக தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் தவெக தலைமை ஒவ்வொரு அடியையும் மிக நிதானமாக எடுத்து வைத்து செயல்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்வதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் தவெக தலைமை உறுதியாக உள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவுகளுக்கு மாறாகவோ அல்லது முரண்பட்ட கருத்துக்களையோ நிர்வாகிகள் பொதுவெளியில் பேசிவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்தவே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
மேலும், கட்சியின் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.
பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.