30 ஆண்டுகளுக்கு மேல் மண்ணோடும் மக்களுடன் இருப்பவர்... விஜய் தமிழக மக்களின் நம்பிக்கை: புஸ்ஸி ஆனந்த்
சென்னை: 30 ஆண்டுகளுக்கு மேல் மண்ணோடும் மக்களுடன் இருப்பவர் விஜய். இவரை அசைத்துப் பார்க்க முடியாது. விஜய் தமிழக மக்களின் நம்பிக்கை என்று பேசியுள்ளார் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
தவெக கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டம் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என 2,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியவுடன் கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41பேருக்கும் தவெக நிர்வாகிகள் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர். மாமல்லபுரத்தில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழுவில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது, த வெ க கூட்டணி குறித்து முடிவு எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன.
அதன்பின்னர் தவெக பொதுச்செயலார் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், நாம் கடந்து வந்த பாதை சாதாரணமானது அல்ல. பல சோதனைகளைத் தாண்டி வந்துள்ளோம். விஜயின் உழைப்புக்கு 30 ஆண்டுகள் தாண்டி தனி வரலாறு உள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேல் மண்ணோடும் மக்களுடன் இருப்பவர் விஜய். நம் எதிரிகள் ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை. இவரை அசைத்துப் பார்க்க முடியாது. விஜய் தமிழக மக்களின் நம்பிக்கை. அவர் கைகாட்டும் திசையில் புதிய வேகத்தில் பயணிக்கவிருக்கிறோம். விஜயை 2026ல் முதல்வராக சபதம் ஏற்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.