தொகுதி மறு சீரமைப்புக்கு எதிர்ப்பு.. அனைத்து கட்சிக் கூட்டம்.. தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு
சென்னை: தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொகுதி மறு சீரமைப்பால் தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற தகவலையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இதனால் தமிழக அரசியல் வட்டாரம் பெரும் பரபரப்புடனே காணப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக விவாதிக்க வரும் மார்ச் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். இதற்காக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அதிமுக,பாஜக, தவெக, விசிக,மநீம, உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் அதிமுக, தவெக, தேமுதிக,விசிக உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொள்வதாக அறிவித்திருந்தனர். பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதையடுத்து, இதனை அரசியலாக பார்க்காதீர்கள். இது நம்முடைய உரிமை தமிழகத்தினுடைய உரிமை. கூட்டத்திற்கு வர முடியாது என்று சொன்னவர்கள் தயவு கூர்ந்து வர அழைப்பு விடுக்கிறேன் என்று மீண்டும் அழைப்பு விடுத்தார் முதல்வர்.
தவெக சார்பில் அதன் தலைவர் விஜய் வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தவெக சார்பில் அதன் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.