எம்எல்ஏக்கள்.. இந்திய அளவில் தவெகவுக்கு 5வது இடம்.. அசத்திய விஜய்!

Su.tha Arivalagan
May 19, 2026,04:53 PM IST

சென்னை: இந்தியாவில் சட்டசபைகளில் அதிக அளவிலான எம்எல்ஏக்களை வைத்துள்ள கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. இந்தப் பட்டியலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி புதிய வரலாற்றை எழுதியுள்ளது. அதாவது 5வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.


பாரம்பரியமான திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் வெகு பின்னுக்குத் தள்ளப்பட்டு புதிய கட்சியாக பிறந்துள்ள தவெக முக்கிய இடத்தில் போய் அமர்ந்திருப்பது வியப்புதான்.


தமிழக அரசியல் களம் எப்போதுமே தனித்துவமானது. திராவிடக் கொள்கைகளும், தனிநபர் ஆளுமைகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த மண்ணில், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் தற்போதைய இந்திய அளவிலான மக்கள் பிரதிநிதிகள் (எம்.எல்.ஏ-க்கள்) எண்ணிக்கைப் பட்டியலில் ஒரு வியத்தகு இடத்தைப் பிடித்துள்ளது.




சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கைப் பட்டியலில் தவெக பெற்றிருக்கும் இடம், அக்கட்சிக்கு கிடைத்துள்ள ஆரம்பகால மாபெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.


இந்தப் பட்டியலில் பாரதிய ஜனதா கட்சி 1,810 எம்.எல்.ஏ-க்களுடன் முதலிடத்திலும், இந்திய தேசிய காங்கிரஸ் 663 இடங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.


ஆந்திராவின் பிராந்தியக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி 135 மற்றும் டெல்லி, பஞ்சாபில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி 123 எம்எல்ஏக்களுடன் முறையே 3 மற்றும்  4வது இடத்தைப் பிடித்துள்ளன.


தமிழக வெற்றி கழகம் 108 எம்.எல்.ஏ-க்களுடன் 5-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஒரு புதிய மாநிலக் கட்சி, தேசிய அளவில் 5-வது பெரிய மக்கள் பிரதிநிதித்துவக் கட்சியாக உருவெடுத்திருப்பது சாதாரண விஷயமல்ல. இது அக்கட்சியின் மீதான மக்களின் எதிர்பார்ப்பையும், அடிமட்ட அளவிலான வாக்கு பலத்தையும் காட்டுகிறது.


இதில் திமுக 10வது இடத்திலும், அதிமுக 12வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.