"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி
சென்னை: முதல்வர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (த.வெ.க.) மற்றும் அ.தி.மு.க. இடையே தற்போது நேரடி வார்த்தைப்போர் வெடித்துள்ளது.
"எம்.எல்.ஏ.க்களை இரவல் வாங்கித்தான் விஜய் ஆட்சி நடத்த முடியும். அதிமுக எம்எல்ஏ.,க்களை பேரம் பேசும் விஜய் தான் களவாணி" என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) விமர்சித்திருந்த நிலையில், அதற்கு த.வெ.க. தரப்பில் இருந்து மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. முதல்வர் விஜய் பஞ்ச் டயலாக்குகள் மட்டும் தான் பேசிக் கொண்டிருக்கிறார். நான்கு கால்கள் இருந்தால் தான் நாற்காலி.
விஜய் ஆட்சி அமைத்து அமர்ந்திருக்கும் ஒரு கால் இரவல் வாங்கிய கால். அதிமுக கட்சியில் வெற்றி பெற்றவர்களை பேரம் பேசி தன் பக்கம் இழுக்கும் விஜய் தான் களவாணி" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். இ.பி.எஸ்-ஸின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமியின் இந்த விமர்சனத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து தற்போது மிகக் காட்டமான பதில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "அ.தி.மு.க. என்ற பேரியக்கம் இன்று பீஸ் பீஸாகி (துண்டு துண்டாக) உடைந்து சிதறி வருவது கூடத் தெரியாமல், ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார் இ.பி.எஸ்." என்று த.வெ.க. சாடியுள்ளது. மேலும், அடுத்தவர்களைப் பற்றி விமர்சிப்பதை விட்டுவிட்டு, முதலில் தங்களது சொந்தக் கட்சியை எஞ்சியிருக்கும் சரிவிலிருந்து காப்பாற்றும் வேலையை இ.பி.எஸ். பார்க்க வேண்டும் என்றும் த.வெ.க.வினர் மிக ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்ததில் இருந்தே திமுக மற்றும் தவெக இடையே தான் கடுமையான மோதல்கள் இருந்து வந்தது. ஆனால் அதிமுக., வை சேர்ந்த 6 எம்எல்ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெக.,வில் சென்று இணைந்த போதும் அதிமுக தரப்பில் அமைதி காக்கப்பட்டது. அதே போல் முதல்வர் விஜய், மேடைக்கு மேடை அதிமுக.,வை மறைமுகமாக தீந்து போன சக்தி என விமர்சித்த போதும் பெரிய அளவில் அதற்கு எதிர்ப்பு குரல் எழவில்லை.
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீது தான் நிர்வாகிகள் சிலர் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வந்தனர். ஆனால் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியே, முதல்வரை களவாணி என விமர்சித்து பேசி உள்ளது தவெக.,வில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக.,வை தொடர்ந்து அதிமுக-தவெக இடையே நேரடி மோதல் துவங்கி உள்ளது என்பதையே இது காட்டுகிறது. இதனால் இனி நாட்களில் தமிழக அரசியல் களம் இன்னும் சூடுபிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.