முதல்வர் விஜயின் முதல் பட்ஜெட்.. சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் மரிய வில்சன்
சென்னை: முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவது பட்ஜெட் இன்று தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
3 மாதங்களுக்கு முன்பு நடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தவெக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து அதிர வைத்தது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாட்டின் முதலாவது கூட்டணி ஆட்சியையும் அமைத்துள்ளது.
இந்த நிலையில் தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலயில் நாளை விவசாயத்துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை என்பதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
பெருந்தலைவர் காமராசர் சிறப்புப் பள்ளிகள் என்ற பெயரில் நவீன உண்டு உறைவிடப் பள்ளிகள் நிறுவப்படும். பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டி்கு ரூ. 125 கோடி ஒதுக்கீடு.
3734 அரசுப் பள்ளிகளில் ரூ. 2132 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கல் திட்டம் அமல்படுத்தப்படும். இதற்கு ஆண்டிற்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சூப்பர் க்ளீன் சூப்பர் கேம்பஸ் என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகம். பள்ளிகளில் தினசரி தூய்மைப் பணிகள், குடிநீர் கழிப்பறை பராமரிப்பு, 24 மணி நேர பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு ரூ. 277 கோடி ஒதுக்கீடு.
உயர் கல்வித்துறைக்கு ரூ. 8393 கோடி நிதி ஒதுக்கீடு.
வெற்றி மடிக்கணணி திட்டத்திற்கு ரூ. 2000 கோடி ஒதுக்கீடு
அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்த ரூ. 3.38 கோடி ஒதுக்கீடு
ரூ. 90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்படும்.
மதுரையில் சீர்மிகு சட்டப்பள்ளி தரத்தில் மேம்பட்ட சட்டக் கல்வி வழங்க 300 மாணவர்களின் சேர்க்கையுடன் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும்.
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 44,527 கோடி ஒதுக்கீடு
ரூ. 50 கோடியில் மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.
சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ. 17, 150 கோடி ஒதுக்கீடு
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 2022 கோடி நிதி ஒதுக்கீடு.
5000 அரசுப் பள்ளிகளிலிருந்து கூடுதலாக 2600 பள்ளிகளுக்கு டிஎன் ஸ்பார்க் திட்டம் விரிவுபடுத்தப்படும்
விளையாட்டில் ஆர்வமும் திறமையும் கொண்ட 8 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் பள்ளி மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வழங்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு
பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்குக் கொண்டு செல்ல தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். அதற்கு ரூ. 42 கோடி நிதி ஒதுக்கீடு
அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்காக ரூ. 131 கோடி ஒதுக்கீடு. நடப்பாண்டில் 362 மாணவர்கள் இதில் பயன் பெறுவர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ. 1051 கோடி ஒதுக்கீடு.
திருநங்கையர் நலனுக்காக 5 மாவட்டங்களில் அரண் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
500 சிதிலமடைந்த அங்கன்வாடி மையங்கள் சீரமைக்கப்படும்.
12 மாவட்டங்களில் ரூ. 6.6 கோடி நிதியில் 12 முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும்.
மூத்த குடிமக்கள் நலனுக்காக பொழுது போக்கு மையங்கள் உருவாக்கப்படும்.
பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கம். ரூ. 710 கோடி நிதி ஒதுக்கீடு
அண்ணனின் சீர் திட்டம். பெண்களின் திருமண நன்னாளில் 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும். ரூ. 812 கோடி நிதி ஒதுக்கீடு.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு ரூ. 1485 கோடி ஒதுக்கீடு
ஹஜ் பயணத் திட்ட மானியம் ரூ. 25,000ல் இருந்து ரூ. 35,000 ஆக உயர்வு
சமூக நீதித்துறைக்கு ரூ. 3937 கோடி ஒதுக்கீடு
ரூ. 250 கோடியில் ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்
அயோத்தி தாச பண்டிதர் வாழ்வி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 300 கோடி
ரூ. 20 கோடியில் மண்ணின் மகள் திட்டம் அமல்படுத்தப்படும்.
ரூ. 33 கோடியில் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
ரூ. 23 கோடியில் தாய் கேர் திட்டம். கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்களாக இவை அமைக்கப்படும்.