கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாவனர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.
கடந்த 27ம் தேதி கரூரில் விஜய்யின் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் சிக்கி பலியாயினார். 100க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதனையடுத்து கடந்த செப்டம்பர் 30ம் தேதி தவெக தலைவர் விஜய் காணொலி வெளியிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதனையடுத்து, கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார். இதற்காக கரூரில் உள்ள ஏதேனும் ஒரு திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து பேசும் வகையில், தவெக சார்பில் மண்டபம் தேடும் பணி நடந்தது. ஆனால், விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மண்டபம் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் கரூர் செல்வதற்காக அனுமதி வழங்குவதில் சிக்கல்கள் எழுந்ததால் சந்திப்பு கைவிடப்பட்டது.
கடந்த 18ம் தேதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வீதம் தவெக சார்பில் வரவு வைக்கப்பட்டது. அதன்பின்னர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு நேரில் வரவழைத்து ஆறுதல் கூற விஜய் முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்தனர்.
அதன்படி, கரூரில் இருந்து சென்னைக்கு 5 சொகுசு பேருந்துகளின் அவர்கள் அழைத்து வரப்பட்டனர். சென்னை வந்த அவர்களை இன்று மகாபலிபுரத்தில் உள்ள விடுதியின் அரங்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல் கூறி வருகிறார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். அப்போது அவர்கள் எழுத்து பூர்வமாக கொடுத்த கோரிக்கைகளை விஜய் பெற்றுக்கொண்டார்.