சொன்னீர்களே? செய்தீர்களா?... திமுகவிற்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பிய தவெக தலைவர் விஜய்!

Meenakshi
Sep 13, 2025,05:14 PM IST

திருச்சி: கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை நம்பிக்கை மோசடி செய்துள்ளது. சொன்னீர்களே? செய்தீர்களா?... என திமுகவிற்கு சரமாரியாக கேள்விகளை  எழுப்பியுள்ளார் தவெக தலைவர் விஜய். 


திருச்சியில் இன்று நடந்த பிரச்சார கூட்டத்தில் விஜய் பேசுகையில், பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ஓசி ஓசி எனச் சொல்லிக்காட்டுகிறார்கள்.  டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?  பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு சொல்லிக் காட்டி அசிங்கப்படுத்துவதா? 




ஏழைகளின் ஏழ்மையை பயன்படுத்தி கிட்னி திருட்டு மோசடி நடக்கிறது. அதுவும் திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான இடத்தில் தான் நடக்கிறது. ஆனால், அதை திருட்டு இல்லை முறைகேடு என திமுக கூறுகிறது. கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை நம்பிக்கை மோசடி செய்துள்ளது. நீட் தேர்வையும் கல்விக் கடனையும் ரத்து செய்வோம் என சொன்னீர்களே செய்தீர்களா?. மக்கள் நலப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினீர்களா? பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றாதது ஏன்?


திருச்சி மாவட்டத்திற்கு 2 அமைச்சர்கள் இருந்தும் என்ன பயன். திருச்சியில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்காமல் மணல்  அள்ளுவதில் திமுக அரசு நன்றாக காசு பார்க்கிறது. கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்து கொடுக்கும். பெண் பாதுகாப்பில், சட்ட பிரச்சனைகளில் No Compromise. நடைுமறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம்.  மீண்டும் சந்திக்கும் வரை, நன்றி வணக்கம் என்று கூறியுள்ளார்.