திமுக விரைவில் விடைபெறப்போகிறது - கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்

Su.tha Arivalagan
Mar 30, 2026,05:31 PM IST
சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுங்கட்சியான திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் தொகுதியில் விஜய்யின் அதிரடிப் பிரசாரம் :

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பல்வேறு பகுதிகளில் தீவிரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் முக்கியக் கட்டமாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் விஜய் இன்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது பேசிய விஜய், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் குறிப்பிட்டு திமுக அரசை நேரடியாகச் சாடினார்.

"திமுகவே காரணம்" - அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் :



கூட்டத்தில் உரையாற்றிய விஜய், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், போதைப்பொருட்களின் புழக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் கூறியதாவது: "தமிழகத்தில் இன்று நிலவும் இந்த அவல நிலைக்கு திமுகவே முழுமுதற் காரணம். குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழலும், இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கமும் அதிகரித்துள்ளது. தமிழகம் இந்த மோசமான நிலைக்குச் செல்ல தீயசக்தி திமுக ஆட்சியின் தவறான நிர்வாகமே காரணம். கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி நடத்தினார்களா அல்லது வேறு ஏதாவது நடத்தினார்களா?"

"விடைபெறும் காலம் வந்துவிட்டது" :

மேலும், வரும் தேர்தலில் மக்கள் திமுகவிற்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று குறிப்பிட்ட அவர், "திமுக ஆட்சி விரைவில் விடைபெறப்போகிறது" என்று மிகத் துணிச்சலாகக் குறிப்பிட்டார். முதல்வரின் தொகுதியிலேயே நின்று கொண்டு, அந்த ஆட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்று விஜய் பேசியது, அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதோடு ஏப்ரல் 23ம் தேதி, அனைவரும் வாக்கு சாவடிக்கு சென்று, விசில் சின்னத்திற்கு நேராக உள்ள பட்டனை அழுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.  அனைதஅது தொகுதிகளிலும் தான் போட்டியிடுவதாக நினைத்து மக்கள் ஓட்டுப் போட வேண்டும் என்றும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

2026 தேர்தல் களம்: புதிய திருப்பம் : 

வழக்கமாகக் கருத்தியல் ரீதியான விமர்சனங்களை முன்வைக்கும் விஜய், தற்போது நேரடியாகத் தரவுகளை முன்வைத்தும், குறிப்பிட்ட சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தியும் திமுகவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் கோட்டையாகக் கருதப்படும் கொளத்தூரிலேயே இத்தகைய விமர்சனங்களை முன்வைத்தது, தவெக-வின் தேர்தல் வியூகத்தின் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கத் தவெக தயாராக உள்ளதாகத் தெரிவித்த அவர், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் உறுதிபடத் தெரிவித்தார்.