சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து.. நவம்பர் 16ல் தவெக போராட்டம்?.. விஜய் வருவாரா??
சென்னை: சார் எனப்படும் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை எதிர்த்து குரல் கொடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் வருகிற 16ம் தேதி போராட்டம் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டத்தில் விஜய்யும் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
கட்சி வட்டாரத் தகவலின்படி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடைபெறும். மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் இந்தப் போராட்டங்களுக்கு தலைமை தாங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
பொதுமக்களிடையே சார் பணிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கட்சி நிர்வாகிகளை கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக ஏற்கனவே குழுக்களையும் தவெக தலைமை அமைத்துள்ளது.
இந்த திருத்த செயல்முறை வாக்காளர் உரிமைகளையும் வெளிப்படைத்தன்மையையும் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதை விளக்க இந்த போராட்டம் ஒரு தளமாக அமைய வேண்டும் என தலைமை விரும்புவதாகக் கூறப்படுகிறது.
கட்சியின் தலைவர் விஜய் போராட்டம் தொடர்பாக விரைவில் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார். அதில் போராட்டத்தின் அட்டவணை மற்றும் தொண்டர்களுக்கான விரிவான அறிவுறுத்தல்கள் இடம்பெறும் என்று தெரிகிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் சார் பணிகளை மேற்கொள்ள திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக எதிர்த்து வருகின்றன. தவெகவும் இந்த எதிர்ப்பில் இணைந்துள்ளது. அதிமுக, பாஜக ஆகியவை ஆதரிக்கின்றன. திமுக இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.