தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷூக்கு எதிராக வழக்குப்பதிவு : வீட்டில் போலீஸ் குவிப்பு...கைதாகிறாரா?

Su.tha Arivalagan
Nov 24, 2026,06:20 PM IST
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்எல்ஏ.,வுக்கு எதிராக கலெக்டர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய விவகாரம் கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. அது போன்ற எஸ்எம்எஸ்.,ஐ தான் அனுப்பவில்லை என கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுத்திருந்தார். இந்நிலையில் இது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என அதிமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் நீதிபதி லட்சுமி நாராயணன் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அளித்த புகாரின் பேரில் தவெக எம்எல்ஏ., அருள் விக்னேஷ் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.  தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் உள்ள எம்எல்ஏ அருள் விக்னேஷின் வீட்டிற்கு காவல் உதவி ஆய்வாளர் லோகேஸ்வரன் தலைமையிலான காவலர்கள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து எம்எல்ஏ வீட்டில் போலீசார் அதிகம் குவிந்துள்ளனர்.






ஒரு புறம் கோர்ட் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம், இதில் அரசியல் செய்ய வேண்டாம் என நீதிபதி கண்டிப்பாக சொல்லி உள்ளார். மறுபுறம் தமிழக அரசியல் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒருமித்த குரலாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எம்எல்ஏ அருள் விக்னேஷை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எம்எல்ஏ.,வை கைது செய்வதற்கான சட்டவிதி என்ன?

ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி என எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரையும் (MLA) குற்றவியல் வழக்கில் கைது செய்ய யாருடைய முன் அனுமதியும் தேவையில்லை. இந்தியச் சட்டத்தின்படி, சாதாரண குடிமக்களுக்குப் பொருந்தும் அதே கைது நடைமுறைகளே எம்எல்ஏக்களுக்கும் பொருந்தும்.  சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே ஒரு எம்எல்ஏவைக் கைது செய்ய காவல்துறையினர் சபாநாயகரிடம் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. ஆனால் எம்எல்ஏ.,வை கைது செய்த உடன் அது குறித்த தகவலை உடனடியாக சபாநாயருக்கு காவல்துறை தரப்பில் தெரிவிக்க வேண்டும். அதே போல் சட்டசபை வளாகம் அல்லது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு எம்எல்ஏ.,வை கைது செய்ய வேண்டும் என்றால் மட்டுமே சபாநாயகரின் அனுமதியை போலீசார் பெற வேண்டும் என சட்ட விதிகள் சொல்கிறது.