தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுக, அதிமுக சதி? பேரம் பேசப்பட்டதாக தவெக எம்எல்ஏ., பரபரப்பு குற்றச்சாட்டு!
மதுரை: தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியை வீழ்த்துவதற்கு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து சதித்திட்டம் தீட்டி வருவதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா குற்றம் சாட்டியுள்ளார்.
ரூ.15 கோடி பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு:
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தவெக எம்.எல்.ஏ முஸ்தபா, தங்களை அணுகிய சிலர் தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகப் பேரம் பேசியதாகத் தெரிவித்தார். "தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மீண்டும் சதிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. என்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட சிலர், தவெகவை விட்டு விலகுவதற்காக ரூ.15 கோடி வரை பேரம் பேசினர். ஆனால், எங்களை போன்ற தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முடியாது. ரூ.100 கோடி கொடுத்தாலும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேச முடியாது" என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமைக்கு தகவல்:
மேலும் பேசிய அவர், "என்னிடம் பேரம் பேசப்பட்டது தொடர்பாக எனது கட்சியின் தலைமைக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து விசாரணைக்கு கோரியுள்ளேன்" எனக் குறிப்பிட்டார். ஏற்கனவே அமைச்சர் நிர்மல்குமாரும், தவெக அரசை கவிழ்த்த சதி நடந்து வருவதாக கூறி வருகிறார். இதற்கிடையில் விரைவில் நடக்க உள்ள அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் தவெக அரசை தோல்வி அடைய செய்ய வேண்டும் என்பதற்காக தவெக.,வை சேர்ந்த 18 எம்எல்ஏ.,க்களிடம் பேரம் பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில் இது போன்ற தகவல்கள் உண்மை தானோ என்பதற்கு ஏற்ப, எம்எல்ஏ முஸ்தபாவின் பேட்டி அமைந்துள்ளது.
சூடேறும் தமிழக அரசியல்:
சமீப காலமாக தமிழக அரசியலில் நிலவி வரும் பல்வேறு நகர்வுகளுக்கு மத்தியில், தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதான எதிர்க்கட்சிகள் மீது இத்தகைய பகிரங்கக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.தவெகவின் இந்த குற்றச்சாட்டு குறித்து திமுக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கங்கள் அல்லது மறுப்பு எதுவும் வரவில்லை என்றாலும், வரும் நாட்களில் இந்த விவகாரம் தமிழக அரசியலில் மேலும் பல புயல்களைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தவெக எம்எல்ஏ.,க்களிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வரும் நிலையில், பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் குதிரை பேர விவகாரம் தலை தூக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.