என் மகனுக்கு TVK என பெயர் வைப்பேன்.. தவெக எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி அதிரடி!

Su.tha Arivalagan
Jun 03, 2026,04:24 PM IST

சென்னை: தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள தவெகவின் இன்னும் ஒரு அதிசயம்தான், திரு.வி.க. நகர் எம்.எல்.ஏவான எம்.ஆர். பல்லவி.


முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய சட்டமன்ற உறுப்பினர்களில், தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் ஒருவராக மாறியுள்ளார் எம்.ஆர். பல்லவி. 


தமிழகத்தின் அண்மைக்கால அரசியல் வரலாற்றில், பல தசாப்த கால திராவிடக் கட்சிகளின் ஆட்சிப் பாரம்பரியத்திற்கு மத்தியில், விஜய் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்துள்ளார். சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் விழா நடைபெற்றபோது, ஒட்டுமொத்த கேமராக்களும், பொதுமக்களின் பார்வையும் ஒரே ஒரு பெண்ணின் மீதுதான் நிலைத்து நின்றன.


அவர்தான் சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.ஆர். பல்லவி. பல்லவி தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோதே அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் கர்ப்பிணியாக எம்.எல்.ஏ பதவியேற்ற முதல் உறுப்பினர் என்ற வரலாற்றையும் படைத்தார். 


36 வயதான பல்லவி ஒரு சாதாரண இல்லத்தரசி. 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவருக்கு எந்தவொரு அரசியல் பின்னணியோ, குடும்ப செல்வாக்கோ கிடையாது. தீவிர விஜய் ரசிகையான இவர், கட்சி ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே தன்னை அதில் இணைத்துக் கொண்டார். திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட திரு.வி.க நகர் தொகுதியில், திமுக வேட்பாளரை 22,333 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.




தனது 8 மாதக் கர்ப்ப காலத்திலும், சென்னையின் கடும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்லவி தொகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது ஒருமுறை அவர் வெயில் தாங்காமல் மயங்கி விழுந்துள்ளார். ஆனால், அதோடு முடங்கிவிடாமல், உடனடியாக எழுந்து மீண்டும் தனது பிரசாரத்தைத் தொடர்ந்துள்ளார்.


சாதாரண எளிய மக்களையும் அரசியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற விஜய்யின் கொள்கைக்கு மிகச்சிறந்த உதாரணமாக பல்லவி திகழ்கிறார். இவரது இந்த வெற்றிப் பயணம், 2013-இல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற சாமானியப் பெண் ராகி பிர்லாவின் வெற்றியைப் பலருக்கு நினைவூட்டியது.


தற்போது எம்.ஆர்.பல்லவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு தமிழ் வெற்றி கொண்டான் என்று பெயரிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். அதை சுருக்கிக் கூப்பிட்டால் TVK என்று அர்த்தம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.