தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்டமைப்பு மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த முக்கிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 3:00 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தவெக-வைச் சேர்ந்த பின்வரும் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது:
1. அமைச்சர்கள்
2. சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்)
3. அனைத்து மாவட்ட செயலாளர்கள்
4. கட்சியின் தலைமை நிர்வாகிகள்
முக்கிய விவாதப் பொருட்கள் :
கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் மக்கள் நலப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், மாவட்ட வாரியாக கட்சியை வலுப்படுத்துவது, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் வரவிருக்கும் தேர்தல்களுக்கான வியூகங்கள் வகுப்பது குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், நிதிஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக இன்று டில்லி புறப்பட்டு சென்றுள்ள இந்த சமயத்தில் அக்கட்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. இதற்கிடையில் ஜூன் 18ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடக்க உள்ளதால் அது குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் கூட்டப்பட உள்ளதாக தெரிகிறது.