தவெக சட்டசபை தலைவராக விஜய் தேர்வு.. நாளை மறு நாள் முதல்வராகப் பதவியேற்பு?

Su.tha Arivalagan
May 05, 2026,05:14 PM IST

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்க  தேவையான அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.


தவெக சட்டமன்ற குழுத் தலைவராக விஜய் தேர்வு :


சென்னை பனையூரில் இன்று நடைபெற்ற தவெக எம்.எல்.ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. இக்கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்றக் குழுத் தலைவராக கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு ஆதரவு தெரிவித்து, கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் விஜய் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.


கவர்னரை சந்திக்க திட்டம் :




ஆட்சி அமைக்க உரிமை கோரி ஏற்கனவே தவெக சார்பில் கவர்னருக்கு கடிதம் அனுப்பப்பட்டு விட்டது. அதோடு பெரும்பான்மையை இன்னும் 2 வாரங்களில் நிரூபிப்பதாகவும் தவெக சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக தமிழக கவர்னர் அர்லேகரை நாளை சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக கவர்னரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


அனேகமாக நாளை மறு நாள் முதல்வராக விஜய் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவை எளிமையான முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


மாமல்லபுரம் ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்கள் :


தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிறு தாமதங்கள் ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. இதனால், கட்சி எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க தவெக தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட உள்ளனர். குதிரை பேரம் அல்லது அரசியல் குழப்பங்களைத் தவிர்க்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தயாராகும் தலைமை செயலகம் :


மறுபுறம், திமுக ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து, சென்னை கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில் மாற்றங்கள் வேகமெடுத்துள்ளன. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அறைகளில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் முறைப்படி அகற்றப்பட்டு வருகின்றன. விரைவில் புதிய அரசு அமையவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அறைகளைச் சுத்தம் செய்யும் பணிகளும், புதிய அரசுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


எதிர்பார்ப்பில் தமிழகம் : 


நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த விஜய், தனது முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிக்கும் நிலைக்கு வந்திருப்பது அவரது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் அத்தியாயம் தொடங்க உள்ளதாகவே இது பார்க்கப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து, விஜய் எப்போது முதலமைச்சராகப் பதவியேற்பார் என்பதே தற்போது தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.