தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
சென்னை: சிபிஐ விசாரணைக்காக நாளை நேரில் ஆஜராக வேண்டியுள்ளதால், இன்று இரவே தவெக தலைவர் விஜய் டெல்லி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2025 செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற விஜய் கலந்து கொண்ட, தவெக கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஜனவரி 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விஜய் ஆஜராகி சுமார் 6 மணி நேரம் விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து மறுநாளே (ஜனவரி 13) மீண்டும் ஆஜராக சிபிஐ அறிவுறுத்தியது. ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் கால அவகாசம் கோரியிருந்தார். இதை ஏற்று ஜனவரி 19ம் தேதி மீண்டும் ஆஜராக சிபிஐ அறிவுறுத்தியது.
அதன்படி இரண்டாவது முறையாக சிபிஐ முன் நாளை ஆஜராகவுள்ளார் விஜய். முதல் விசாரணையின்போது விஜய்யிடம் 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. நாளையும் விஜய்யிடம் ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை நடந்த விசாரணையின்போது தமிழ்நாடு டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதமும் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். நாளைய விசாரணையின்போது இதேபோல வேறு யாரேனும் விசாரணைக்கு வருவார்களா என்று தெரியவில்லை.
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத் தணிக்கை தொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது 21ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது நினைவிருக்கலாம். இந்த நிலையில் நாளை சிபிஐ விசாரணைக்காக மீண்டும் ஆஜராகிறார் விஜய். இதற்காக இன்று இரவே அவர் டெல்லி புறப்பட்டுப் போவதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.