அம்மா அம்மான்னு சொல்லிட்டு.. அதிமுகவை அதன் கோட்டையில் வைத்து கடுமையாக விமர்சித்த விஜய்!
நாமக்கல்: அம்மா அம்மான்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக் கொண்டு பாஜகவுடன் பொருந்தாக் கூட்டணியை வைத்துள்ள அதிமுகவைப் போல நாங்கள் இருக்க மாட்டோம் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கூறியுள்ளார்
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் இன்று புகுந்துள்ளார் விஜய். முதல் மாவட்டமாக நாமக்கல்லில் இன்று விஜய் பேசினார். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. எந்தத் தேர்தல் வந்தாலும் இங்குள்ள தொகுதிகளில் அதிமுகவே அதிகம் வெல்லும். எம்ஜிஆர் காலத்தில் மட்டுமல்லாமல், ஜெயலலிதா காலத்திலும் சரி, அவருக்குப் பின்னாலும் சரி மேற்கு மாவட்டங்களில் எப்போதுமே அதிமுக வலுவாக இருக்கும். அதைத்தான் மாற்ற திமுக கடுமையாக முயன்று வருகிறது.
இந்த நிலையில் அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படும் கொங்கு மண்டலத்தில் வைத்து அதிமுகவை கடுமையாக விமர்சித்து அதிரடி காட்டியுள்ளார் விஜய். மேலும் வழக்கமாக திமுகவை அதிகமாக சாடும் விஜய், இன்றைய கூட்டத்தில் அதிமுகவையும் சேர்த்து கடுமையாக தாக்கியது விஜய்யின் டார்கெட் என்ன என்பதை மேலும் வலுவாக உணர்த்துவது போல உள்ளது.
எனக்கு திமுகவும் சரி, அதிமுகவும் சரி ஒரே எதிரிகள்தான்.. இரண்டுமே பேருமே எனக்கு எதிரிகள்தான் என்பதை தெளிவாக இன்று உணர்த்தியுள்ளார் விஜய். பாஜகவை அவர் தொடர்ந்து விமர்சித்து வருவதால் தற்போது இந்த மூன்று கட்சிகளையும் சம எதிரிகளாக மாற்றி மக்களிடம் தனது எண்ணத்தை மேலும் தெளிவுபடுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இன்றைய நாமக்கல் பேச்சில் இன்னொரு முக்கிய விஷயத்தைப் பார்க்க வேண்டும். அதாவது அதிமுக தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்கும் வேலையை விஜய் பகிரங்கமாகவே இன்று தொடங்கி விட்டார். விஜய் பேசும்போது, மூச்சுக்கு முன்னூறு தடவை அம்மா அம்மானு சொல்லிட்டு ஜெயலலிதா மேடம் சொன்ன விஷயத்தை டோட்டலா மறந்துட்டு பொருந்தாக் கூட்டணியை அமைத்துக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளார்களே, அதுமாதிரி நாம இருக்க மாட்டோம்.. அதிமுக பாஜக கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்களுக்கு மக்களின் ஆதரவு இல்லை என்று கூறினார் விஜய்.
அம்மா அம்மா என்று கூறிக் கொண்டு, ஜெயலலிதாவை மறந்து விட்டு என்ற வார்த்தைகளை விஜய் தெளிவாக தேர்ந்தெடுத்துப் பேசியிருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் அதிமுக தொண்டர்களிடம், அவர்கள் உங்களது ஜெயலலிதாவை மறந்து விட்டார்கள்.. நீங்க என் பக்கம் வந்துருங்க என்று மறைமுகமாக சொல்வது போல இது தோன்றுகிறது. அதாவது அதிமுகவினரை தன் பக்கம் பகிரங்கமாகவே அழைத்துள்ளார் விஜய் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
விஜய் வெற்றியானது அதிமுகவை மேலும் பலவீனமாக்கும் என்றுதான் எல்லா அரசியல் நிபுணர்களும் சொல்லி வருகிறார்கள். அதைத்தான் விஜய்யும் தனது கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது. அதைத்தான் இன்றைய நாமக்கல் பேச்சும் உணர்த்தியுள்ளது. இதுவரை அதிமுகவை பகிரங்கமாக பேசாத விஜய் முதல் முறையாக பேசியுள்ளார். அதிலும் அதிமுக வலுவாக உள்ள கொங்கு மண்டலத்தில் அவர் பேசியிருப்பது பெரும் ஆச்சரியமானதாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது எந்த இடத்தில் யார் பலமாக உள்ளார்களோ அந்த இடத்தில் வைத்து அவர்களை அடிப்பது என்ற பாலிசியை விஜய் கையில் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
சும்மா சொல்லக் கூடாது.. பலே அரசியல்வாதியாக மாறி வருகிறார் விஜய் என்று தாராளமாக சொல்லலாம்!