CM Vijay Swearing in: முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்.. அமைச்சர்களும் பதவியேற்பார்கள்
May 09, 2026,08:00 PM IST
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், நாளை தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்கவுள்ளார். காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
தவெக தலைவர் விஜய் சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றார். 108 எம்எல்ஏக்களுடன் தவெக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு ஜாம்பவான்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் விஜய்.
இந்த நிலையில் பெரும்பான்மை பலத்துக்காக கடந்த சில நாட்களாக கடுமையாக போராடி வந்தது தவெக. ஒரு வழியாக இன்று ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கை கிடைத்ததைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்லேகரை தனக்கு ஆதரவு தரும் கட்சிகளின் தலைவர்களுடன் சென்று சந்தித்து மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய்.
ஆளும் பரிசீலனைக்குப் பின்னர் ஆட்சியமைக்க ஒப்புதல் அளித்தார். இதையடுத்து நாளை காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. முதல்வராக விஜய்க்கு, ஆளுநர் ஆர்லேகர் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
முதல்வராக விஜய் பதவியேற்ற பின்னர் அமைச்சர்கள் சிலரும் பதவியேற்பார்கள். என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே. ஏ. செங்கோட்டையன், வெங்கட்ரமணன், சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோர் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.
ராகுல் காந்தி வருகிறார்
விஜய் பதவியேற்பு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் வருவார்கள் என்று தெரிகிறது.
தங்களது அபிமான நடிகராக இருந்து இப்போது தலைவராக உருவெடுத்துள்ள விஜய்யை, முதல்வராகக் காணப் போகும் உற்சாகத்தில் மிதந்து கொண்டுள்ளனர் தவெகவினர். தமிழ்நாடு முழுவதும் மாலை முதலே கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.