களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
மதுரை: நாளை மறுநாள் தவெக 2வது மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது கட்சியை ஆரம்பித்தார். அதன்பின்னர் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் பிரம்மாண்ட அளவில் நடத்தினார். இதற்கு அடுத்த படியாக தவெக கட்சியின் 2வது மாநில மாநாட்டை மதுரையில் நாளை மறுநாள் நடத்த உள்ளார் விஜய். இந்த மாநாட்டை மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
மாநாட்டிற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டு மேடை 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் அமைக்கப்பட்டு, அங்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கு 200 இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. மேடையில் இருந்து விஜய், தொண்டர்களை நடந்து சென்று சந்திக்க 300 மீட்டர் நீளத்தில் ரேம்ப் வாக் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு 21-ந்தேதி பிற்பகல் 3.15 மணி முதல் இரவு 7.15 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நாளை மறுநாள் தவெக மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக தற்போது மதுரை வந்தடைந்துள்ளார். மாநாட்டு பணிகள் குறித்து இன்று மாலையில் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் இன்று முதல் மாநாடு நிறைவு பெறும் வரை விஜய் மதுரையில் தான் இருப்பார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.