மற்றவர்களுக்கு இது தேர்தல், நமக்கு இது எமோஷன் - நெல்லையில் அனல் பறக்கப் பேசிய விஜய்

Su.tha Arivalagan
Apr 08, 2026,04:52 PM IST

திருநெல்வேலி: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், திருநெல்வேலியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார். தனது அரசியல் வருகை மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.


கூட்டத்தில் பேசிய விஜய், ஆளும் திமுக மற்றும் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக ஆகிய இரண்டு தரப்பையும் கடுமையாக விமர்சித்தார். "வெளியே பார்க்கும் போது திமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் தனித்தனியாக இருப்பது போலத் தோன்றலாம். ஆனால், உள்ளுக்குள் அவர்கள் இருவரும் ஒன்று தான். 


இருவருக்கும் ஒரே நோக்கம் தான் உள்ளது. அது என்னவென்றால், மக்களுக்கு நல்லது செய்ய விஜய் வந்துவிடக் கூடாது என்பதுதான்," என்று அவர் கூறினார். மேலும், தனது வருகையால் தற்போதைய அரசியல்வாதிகள் ஊழல் செய்ய முடியாமல் முடங்கியிருப்பதாகவும், அதன் காரணமாகவே அவர்கள் தன் மீது மிகுந்த கோபத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.




முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்த கருத்து :


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்துப் பேசிய விஜய், "திமுக கையில் முழு அதிகாரம் இருந்திருந்தால், இன்று நாம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த நிகழ்வு திட்டமிட்டபடி நடந்திருக்காது. ஸ்டாலின் சார் தற்போது அதிகாரம் இல்லாத ஒரு முதல்வராக இருப்பதால் தான் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுகிறது," என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். திமுகவின் பிடி தளர்ந்து வருவதையே இது காட்டுவதாக அவர் சூசகமாகக் குறிப்பிட்டார்.


தனது அரசியல் பயணத்தை வெறும் அதிகாரத்திற்கான ஒன்றாகப் பார்க்கவில்லை என்பதை வலியுறுத்திய விஜய், "மற்றவர்களுக்கு இது ஒரு சாதாரணத் தேர்தல்  ஆக இருக்கலாம். ஆனால் விஜய்க்கும், விஜய்யோடு நிற்பவர்களுக்கும் இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம் . எனக்கு ஒரு பாதிப்பு என்றால் மக்கள் கவலைப்படுவார்கள்; மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் என் கண்கள் கலங்கும்," என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். மக்களுடனான தனது பிணைப்பு அரசியல் கடந்தது என்பதையும் அவர் இதன் மூலம் பதிவு செய்தார்.