விஜய்யின் சேலம் பேச்சு எப்படி இருக்கு?...கூட்டத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா?

Su.tha Arivalagan
Feb 13, 2026,05:00 PM IST

சென்னை :  தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்றது. வழக்கம் போல் முதலில் இந்த கூட்டத்திற்கும் போலீசார் அனுமதி தர மறுத்து விட்டு, பிறகு 5000 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளித்தனர். விஜய்யின் இன்றைய பேச்சு வழக்கமானதாக இருந்ததா அல்லது சற்று வித்தியாசமாக இருந்ததா? இது மக்களிடம் எடுபடுமா? என்பது பற்றி வாருங்கள் அலசி ஆராயலாம்.


இதுவரை விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் இருந்து இன்றைய சேலம் நிகழ்ச்சி ரொம்பவே வித்தியாசமாக இருந்தது என்றே சொல்லலாம். வழக்கமாக விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் முதலில் ராஜ்மோகன், பிறகு அருள்ராஜ், ஆதவ் அர்ஜூனா, புஸி ஆனந்த், சமீப காலமாக செங்கோட்டையன் ஆகியோர் பேசி முடித்த பிறகு தான் கேரவனுக்குள் இருந்து வெளியே வருவார் விஜய். ஆனால் இன்றைய சேலம் நிகழ்ச்சியில் ராஜ் மோகன் பேசியதும் சேலம் மாவட்ட தவெக நிர்வாகியான பார்த்திபன் பேசினார். அதற்கு பிறகு அருள் ராஜ், செங்கோட்டையன் ஆகியோர் பேச உள்ளதாக ராஜ் மோகன் அறிவித்தார். ஆனால் அவர்களுக்கு பதில் நேரடியாக விஜய்யே பேச வந்தார். கடைசியாக செங்கோல் அளிப்பதற்கு மட்டும் அருள் ராஜ் மேடைக்கு வந்தார். ஆதவ் அர்ஜூனா, புஸி ஆனந்த், செங்கோட்டையன் ஆகியோர் அப்போது கூட மேலே அழைக்கப்படவில்லை.




வழக்கமாக விஜய் பேசும் போது மாநில அரசான திமுக.,வை ஒரு தாக்கு, மத்திய அரசான பாஜக.,வை ஒரு தாக்கு தாக்கி பேசி விட்டு, அந்த மாவட்ட பிரச்சனைகளை பட்டியலிட்டு பேசுவார். பிறகு திமுக அரசை, முதல்வர் மு.க.ஸ்டாலினை கேள்வி கேட்பார். விமர்சனங்களை முன் வைப்பார். பஞ்ச் டயலாக்குகள் சில இருக்கும். இதனால் அவர் மீதான ஸ்டார் இமேஜ் மட்டுமே பெரும்பாலானவர்களின் மத்தியில் தற்போது வரை இருந்து வருகிறது. அவரை ஒரு அரசியல் கட்சி தலைவராக, முழு நேர அரசியல்வாதியாக பார்ப்பவர்கள் குறைவாகவே இருந்து வருகிறார்.


ஆனால் இன்றைய விஜய்யின் பேச்சில் அரசியலின் தீவிரம் வெளிப்பட்டது. தமிழ்நாட்டில் நிகழும் பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசி உள்ளார். குறிப்பாக டிஜிபி விவகாரம் குறித்து அவர் பேசி உள்ளார். தமிழ்நாட்டிற்கு நிரந்தர டிஜிபி இதுவரை நியமிக்கப்படாமல் இருப்பது குறித்தும், சட்ட ஒழுங்கு விவகாரங்கள் குறித்தும் இதுவரை அதிமுக.,வும், பாஜக.,வும் தான் பேசி வந்தன. தற்போது விஜய்யும் அந்த பிரச்சனையை எடுத்து பேசி உள்ளார். அதே போல் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் அவர் தமிழக முதல்வரை கேள்வி எழுப்பி உள்ளார்.அதே போல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, பிறகு ரத்து செய்யப்பட்டது குறித்தும் விஜய், தமிழக அரசை கேள்வி கேட்டு, விமர்சித்தார். 


விஜய் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், அதிமுக பற்றி விஜய் பேசுவது கிடையாது, பாஜக.,வின் பி டீம் போன்ற விமர்சனங்களுக்கும் மிக தெளிவாக பதிலளித்து விட்டார். எதிர் கேள்விகளை மட்டும் முன் வைக்காமல் விஜய் முதல் முறையாக மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். இன்று தமிழக முதல்வர் அறிவித்த மகளிர் உரிமை தொகை மக்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கையில், அதையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, அதை வைத்தே தவெக.,விற்கு ஓட்டு போடும்படி விஜய் கேட்டுக் கொண்டார். விஜய்யின் இன்றைய பேச்சுக்கு நெருக்கடி தரும் என நினைத்த மகளிர் உதவித்தொகையை வைத்து தவெக.,விற்காக விஜய் பிரச்சாரம் செய்துள்ளது பாராட்டுக்குரியது தான்.


இதுவரை இருந்த ஸ்டார் என்ற இமேஜில் இருந்து வெளியே வந்து, தெளிந்த அரசியல்வாதியாக, மிக தெளிவாக தனது கருத்துக்களை விஜய் முன் வைத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். தவெக தான் அடுத்து ஆட்சி அமைக்க போகிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை விஜய்யின் பேச்சில் வெளிப்பட்டது. அதே போல் மற்றவர்கள் துவங்கிய கட்சியை வைத்துக் கொண்டு ஓட்டு வாங்குவதை விட, தன்னை போல் சுயமாக கட்சி ஆரம்பித்து, தனியாக நின்று ஒரு சதவீதம் ஓட்டு வாங்க முடியுமா என விஜய் கேட்டது கொஞ்சம் ஓவராக இருந்தாலும், அது அவரது அதிகபட்ச நம்பிக்கையை காட்டுகிறது. தவெக.,விற்கு 30 சதவீதம் ஓட்டுக்கள் இருப்பதாக விஜய் கூறுகிறார். ஆனால் இதில் விஜய் ஒரு விஷயத்தை மறந்து விட்டார். கட்சி யார் துவங்கியதாக இருந்தாலும், மற்ற கட்சிகள் பல முறை தேர்தலில் போட்டியிட்டு தங்களின் ஓட்டு சதவீதத்தை களத்தில் காட்டி உள்ளன. ஆனால் விஜய் சொல்லும் 30 சதவீதம் என்பது சர்வே அடிப்படையிலானது மட்டுமே. தேர்தலில் போட்டியிட்டு தவெக தனியாக வாங்கியது கிடையாது.  


விஜய் பேசிய சில கருத்துக்கள் சற்று முரணாக, சினிமா பாணியில் இருந்தாலும் பெரும்பாலான கருத்துக்கள் தெளிவான அரசியல் பதிலடியாக, சரியான கவுண்ட்டராகவே இருந்தது என்பதை மறுக்க முடியாது. ஆட்சியில் அதிகாரம் என்ற விவகாரத்திலும் விஜய் கூறிய கருத்தை யாராலும் மறுக்க முடியாது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசியல் களம் பற்றிய தெளிவான புரிதல் விஜய்யிடம் ஏற்பட்டிருப்பதும், அவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டார் என்பதையுமே விஜய்யின் இன்றைய பேச்சு காட்டுகிறது.