ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்

Su.tha Arivalagan
Mar 11, 2026,02:03 PM IST

சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தற்போது வேட்பாளர் தேர்வுப் படலத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேற்று முதல் விஜய் நேரடியாக நேர்காணல் நடத்தி வருகிறார்.


பனையூரில் குவிந்த நிர்வாகிகள்: 


தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விரும்பி ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், முதற்கட்டமாகத் தகுதியுள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மார்ச் 10 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளிடம் தலைவர் விஜய் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நேர்காணலின் முதல் நாளில் மட்டும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 60 முக்கிய நிர்வாகிகள் விஜய்யைச் சந்தித்துப் பேசினர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை விஜய் உரையாடியதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


விஜய் முன்வைக்கும் கேள்விகள் என்ன?




இந்த நேர்காணலில் வெறும் அரசியல் அனுபவத்தை மட்டும் பார்க்காமல், வேட்பாளர்களின் சமூகப் பின்னணி மற்றும் மக்கள் செல்வாக்கு குறித்து விஜய் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார். குறிப்பாக:


- தொகுதியின் தற்போதைய கள நிலவரம் என்ன?

- கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் செய்துள்ள பணிகள் என்ன?

- ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பலம், பலவீனங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்?

-  பெண்களுக்குக் கட்சி அளித்துள்ள 13 வாக்குறுதிகளை மக்களிடம் எப்படிக் கொண்டு செல்வீர்கள்?


போன்ற கேள்விகளை முன்வைத்து, வேட்பாளர்களின் தெளிவு மற்றும் ஆளுமையை விஜய் சோதித்து வருவதாகக் கூறப்படுகிறது.


நேர்மையான தேர்வுக்கு முன்னுரிமை :


மற்ற பாரம்பரியக் கட்சிகளைப் போலல்லாமல், புதுமையான முறையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். ஊழல் கறை படியாதவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். நேர்காணல் முடிந்த பின்னரே, இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் எனத் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.


ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு :


விஜய் தானே களத்தில் இறங்கி வேட்பாளர்களை நேர்காணல் செய்வது, தவெக தொண்டர்களிடையே பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளர் நேர்காணலின் முதல் நாளில் பங்கேற்ற 60 பேரும் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் நேர்காணல்களும் நிறைவடைந்த பிறகே இறுதி வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவரான விஜய் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.