உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூரில் தவெக மகளிர் அணி சார்பில் போலீசில் புகார்
தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் காவல் நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணியினர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து தஞ்சாவூர் போலீஸார் உதயநிதியின் நீலாங்கரை இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.
தஞ்சையில் நேற்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த போராட்டம் நடைபெற்றது. திமுக சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு ஆளும் தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். இதற்கிடையில் தஞ்சை கூட்டத்தில் உதயநிதி பேசிய வார்த்தை சர்ச்சையாகி உள்ளது.
இதுதொடர்பாக தஞ்சாவூர் காவல் நிலையத்தில் த.வெ.க மகளிர் அணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சென்று புகார் மனுவை அளித்தனர். அதில், பொதுவெளியில் பேசும்போது பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், அவர்களைக் களங்கப்படுத்தும் நோக்கிலும் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களைப் பற்றி தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், இதற்காக அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் த.வெ.க மகளிர் அணியினர் வலியுறுத்தியுள்ளனர். பொதுமேடைகளில் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் இதுபோன்று பேசுவது சமூகத்தில் தவறான முன்மாதிரியை உருவாக்கும் என்பதால், இந்த விவகாரத்தில் காவல் துறை உடனடியாக தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு வெளியே இன்று காலை போலீஸார் குவிக்கப்பட்டனர். சற்று நேரத்தில் தஞ்சாவூர் போலீஸாரும் வருகை தந்தனர். இதனால் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் பரவின. அது தற்போது உறுதியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்குள் இணை ஆணையர் விஜயக்குமார் தலைமையில் போலீஸார் சென்றுள்ளனர். அங்கு உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவரது மனைவியிடம் போலீஸார் தெரிவித்துள்ளனர். உதயநிதி வீட்டில் தற்போது முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், உதயநிதியின் சகோதரி கணவர் சபரீசன் உள்ளிட்டோர் உள்ளனர். வழக்கறிஞர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் போலீஸார் கைது நடவடிக்கைக்கு உதயநிதி தரப்பு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால் வீட்டுக்குள் பரபரப்பு நிலவுகிறது.
அண்மைக் காலமாகப் பல்வேறு அரசியல் கூட்டங்களில் தலைவர்கள் பேசி வரும் கருத்துக்கள் விவாதப் பொருளாகி வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தமிழக வெற்றிக் கழகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர், இது குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தி, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தஞ்சாவூர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.