அம்மா உணவகம் போல... டெல்லியில் அடல் உணவகம்... 5 ரூபாய்க்கு இரண்டு வேளை சாப்பாடு!
சகோ. வினோத்குமார்
டெல்லி: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை போன்று டெல்லியிலும் அடல் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அடல் உணவகத்தை டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்துள்ளார்.
இந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ரேகா குப்தா வெற்றி பெற்றார். இவர் டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சர் ஆவார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் டெல்லியில் 100 அடல் கேண்டின் திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி அடல் பிகாரி வாஜ்பாயின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று டெல்லியில் 45 அடல் கேண்டின் திறக்கப்பட்டது.
அடல் கேண்டினில் தினசரி மதியம் மற்றும் இரவு உணவுகள் 5 ரூபாய்க்கு வழங்கப்படும். பருப்பு சாதம், சப்பாத்தி, பருவத்திற்கு ஏற்ற காய்கறிகள் போன்றவற்றுடன் சத்தான உணவாக வழங்கப்படும். இந்த உணவகம் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையும் , மாலை 6.30 மணி முதம் 9.30 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடல் கேண்டீன் திட்டத்தின் முன்னோடியாக தமிழ்நாட்டின் அம்மா உணவகம் உள்ளது. 2013 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. புயல், வெள்ளம் போன்ற கடினமான காலங்களில் அம்மா உணவகம் மூலம் இலவச உணவுகள் வழங்கப்பட்டு ஏழை மக்களின் பசித்துயர் தீர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வேலை தேடுபவர்கள், ஆதரவற்ற முதியவர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கு இது வரப்பிரசாதமாக இருந்தது.
இதைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் என் டி ஆர் மற்றும் இந்திரா என்ற பெயர்களில் உணவகங்கள் தொடங்கப்பட்டன. தற்போது டெல்லியிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அடல் கேண்டீன் மூலம் ஏழைகள் மற்றும் அன்றாடம் வேலைக்கு செல்வோர் அதிக அளவில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(சகோ. வினோத்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)