Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!
May 10, 2026,08:34 PM IST
சென்னை: தவெக தலைவர் ஜோசப் விஜய் முதல்வராகியுள்ள நிலையில், எதிர்க்கட்சி வரிசைக்கு மாறியுள்ள திமுக சார்பில் சட்டசபை கட்சித் தலைவராக முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவராக அவர் செயல்படப் போகிறார்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்த நிலையில் அவரது பொறுப்புகளை உதயநிதி ஸ்டாலின் இனி வகிக்கவுள்ளார். சட்டசபையில் திமுகவுக்கு அவர் தலைமை தாங்கவுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக செயல்படவுள்ளார். ஆளுங்கட்சியான தவெகவுக்கு நேருக்கு நேர் நிற்கப் போகிறார். குறிப்பாக முதல்வர் விஜய்க்கும், உதயநிதிக்கும் இடையிலான வார்த்தைப் போர்கள், உரையாடல்கள், விவாதங்கள் வரும் நாட்களில் பேசு பொருளாகப் போகின்றன. பெரும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
இருவருமே திரைப்பட நடிகர்களாக வலம் வந்து பின்னர் அரசியலில் புகுந்தவர்கள். விஜய்க்கு முன்பாகவே அரசியலுக்கு வந்து விட்டவர் உதயநிதி ஸ்டாலின். முதலில் எம்எல்ஏ, பின்னர் இளைஞர் அணிச் செயலாளர், அதைத் தொடர்ந்து துணை முதல்வர் என்று வேகமாக பதவிகளைப் பெற்றவர். இப்போது எதிர்க்கட்சித் தலைவர் என்ற மிக முக்கியமான பொறுப்புக்கு உயரவுள்ளார்.
தயநிதி ஸ்டாலின் தலைமையில் கட்சி செயல்பட்டாலும், அவருக்குத் துணையாக அனுபவம் வாய்ந்த தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்: துணைத் தலைவராக கே.என். நேரு செயல்படுவார். நிர்வாகத்திலும், அரசியல் வியூகத்திலும் தேர்ந்தவர் நேரு என்பதால் உதயநிதிக்கு பக்க பலமாக அவர் இருப்பார்.
கொறடாவாக, எ.வ. வேலு) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சட்டசபை விதிகள் மற்றும் உறுப்பினர்களை ஒருங்கிணைப்பதில் வல்லவர். இதன் மூலம், உதயநிதியின் 'வேகத்திற்கு' இணையாக, இந்த மூத்த தலைவர்களின் 'விவேகமும்' இணைந்து ஆளுங்கட்சிக்குக் கடும் சவாலை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றகூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, கட்சியில் ஒரு மென்மையான அதிகார மாற்றத்தை நோக்கிய நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.
முதல்வர் விஜய்யின் மக்கள் செல்வாக்கு மற்றும் அவரது கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக, சட்டசபையில், திராவிட மாடல் கொள்கைகளைத் தீவிரமாக முன்வைக்க திமுக இக்குழுவைப் பயன்படுத்தும்.
உதயநிதி மற்றும் விஜய் இருவருமே சமூக வலைதளங்களிலும் இளைஞர்கள் மத்தியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள். எனவே, சட்டசபை விவாதங்கள் பொதுவெளியில் பெரும் விவாதங்களை உருவாக்கும். தமிழகத்தின் வலுவான எதிர்க்கட்சியாக, திமுக தனது முழு பலத்தையும் காட்டி விஜய்யின் அரசை நெருக்கடிக்குள்ளாக்க முயலும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும், இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் விஜய் vs உதயநிதி என்ற நேரடிப் போட்டிக்கு அதிகாரப்பூர்வ முத்திரை குத்தியுள்ளது. கொள்கை ரீதியாகவும், தனிப்பட்ட செல்வாக்கு ரீதியாகவும் இருவருக்கும் இடையே நடக்கப்போகும் இந்த 'சட்டசபை போர்' தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகவும் இருக்கும்.