ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!

Su.tha Arivalagan
Dec 30, 2025,03:38 PM IST

- சகோ. வினோத்குமார்


மாஸ்கோ: ரஷ்யா அதிபர் புதின் வீட்டின்  மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் உக்ரைன்-அமெரிக்கா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அறிவித்த 28 அம்ச திட்டத்தின் பெரும்பாலானவற்றை உக்ரைன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 


உக்ரைனில் 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த அதிபர் விக்டர் யனுகொவிச் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ரஷ்யா உக்ரைனின் கிரிமியா பகுதிகளை கைப்பற்றியது. இதற்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகமானது. இதைவிட உக்ரைன் நேட்டோவில் இணைய போவதாக எடுத்த முடிவு ரஷ்யாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. 




2008 ஆம் ஆண்டிலேயே நேட்டோவில் உக்ரைன் இணைய விண்ணப்பித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது. 2021 ஆம் ஆண்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோவில் இணைய அதிக ஆர்வம் காட்டினார். ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் எச்சரிக்கையை மீறி ஜெலன்ஸ்கி செயல்பட்டதால் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தார்.


ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை தொடர்ந்து விதித்து வந்தது.  அமெரிக்க அதிபர் பைடன் ஆட்சிக்காலத்தில் உக்ரைனுக்கு அதிக அளவில் ஆயுத உதவி மற்றும் நிதி உதவி அளித்து வந்தது. இதனால் போரில் ரஷ்யாவிற்கு உக்ரைன் கடும் சவாலாக  இருந்தது.  


ஆனால் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் தான் ஆட்சிக்கு வந்தால் உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று கூறினார். அதன்படி 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின்பு போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.


இதன் ஒரு முக்கிய பகுதியாக கடந்த மாதம் 28 அம்ச திட்டத்தை அறிவித்தார். ஆனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தத் திட்டத்தைஇந்தத் திட்டத்தை ஏற்க மறுத்து விட்டார். இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து வந்தது. 


ரஷ்யா-உக்ரைன் போர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் நேற்று இரவு ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் வீட்டைக் குறிவைத்து 91 ட்ரோன்கள் ஏவப்பட்டன என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அனைத்து ட்ரோன்களையும் ரஷ்யா நடுவானிலையே வீழ்த்தியதாகவும்   கூறியுள்ளது. 


அதே நேரம் இந்த தாக்குதலை தாங்கள் நிகழ்த்தவில்லை  என்று உக்ரைன் மறுத்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் வீட்டின் மீது தொடரப்பட்ட தாக்குதல் சர்வதேச அரங்கில் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான போர் இன்னும் தீவிரமாகலாம் என அனைத்து நாடுகளையும் கவலை கொள்ளச் செய்துள்ளது. 


இதனிடைய அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இருவரும் சந்தித்து போர் குறித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் 28 அம்சத் திட்டத்தில் பெரும்பாலானவற்றை உக்ரைன் ஏற்றுக்கொள்வதாக இருவரும் தெரிவித்துள்ளனர். இதனால் போர் நிறுத்தத்தின் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த இரு வேறுபட்ட நிகழ்வுகளால் உலக நாடுகள் ஒரே நேரத்தில் பேரதிர்ச்சி மற்றும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.


(சகோ.வினோத்குமார், கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)