மனிதனுக்கு பாடம் சொன்ன காகம் (சிறார் கதை)

Su.tha Arivalagan
Jan 24, 2026,01:00 PM IST

- ஆ.வ.உமாதேவி


ஒரு ஊரில் பாட்டி ஒருத்தி மரத்தடியில் வடை சுட்டு, விற்று, உண்டு வாழ்ந்து வந்தாள். பாட்டி கடைக்கு பக்கத்தில் தாத்தா ஒருவர், டீக்கடை வைத்து பிழைப்பை நடத்தி வந்தார். பாட்டியும் தாத்தாவும் நல்ல நண்பர்கள். வயதானாலும் சுயமாக உழைத்து சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். 


ஒரு நாள் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தபோது, காகம் ஒன்று, (பாட்டியிடம் வடை திருடிச்சென்றதே அந்த காகம் அல்ல) பாட்டியிடம் வந்து, பாட்டி எனக்கு வடை தாங்க என்று கேட்டது. அதற்கு பாட்டி ஆரோக்கியமாக இருக்கும் உனக்கு இலவசமாக வடை தர முடியாது என்று கூறினார். இதை கேட்ட காகத்திற்கு இலவசமாய் வடையை கேட்டது தவறு என்று புரிந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தது. சட்டென ஒரு யோசனை தோன்றியது. 


பக்கத்தில் இருந்த தாத்தாவின் கடையில் சில பேர் தேநீர் குடித்துவிட்டு காகிதக் குவளைகளை கண்ட இடங்களில் வீசி எறிந்து விட்டு, சென்றிருந்தனர். "காலி தேநீர் குவளைகளை இங்கே போடவும்" என்ற அறிவிப்பு பலகையையும் குப்பை தொட்டியையும் பொறுப்பாக, சரியான இடத்தில் தாத்தா வைத்திருந்தார். தேநீர் குடிக்கும் சிலர் இதை கண்டு கொள்ளாமல் கண்ட இடங்களில் தேநீர் குவளைகளை வீசி எறிந்து விட்டு சென்றிருந்தனர். 




காகத்தின் மூலையில் சட்டென ஒரு மின்னல் வெட்டியது. மட மடவென தேநீர் குவளைகளை தன் அலகால் எடுத்து குப்பை தொட்டியில் போட்டது. மனிதர்களின் பொறுப்பில்லா பணியை நினைத்து வருத்தப்பட்ட தாத்தா, காகத்தின் நேர்த்தியான பணியையும் உழைப்பையும் கண்டு நெகிழ்ந்து போனார். காகத்தின் உழைப்புக்கு ஊதியம் கொடுக்க எண்ணி பத்து ரூபாய் தாள் ஒன்றை காகத்திடம் தந்தார். பத்து ரூபாயை தாத்தாவிடம் நன்றியோடு  பெற்றுக்கொண்ட காகம், பாட்டியிடம் சென்று வடை கேட்டது. 


காகத்தின் செயலை எண்ணி பெருமிதம் அடைந்த பாட்டி இரண்டு வடைகளை கொடுத்தாள். உழைப்பால் கிடைத்த வடையை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்ட காகம், வடையை சாப்பிட மரத்தில் அமர்ந்தது. அந்த வழியாய் வந்த நரி, காக்கா... காக்கா  நீ ரொம்ப அழகா இருக்கே என்றதும், நரியின் வஞ்சக எண்ணம் காகத்திற்கு புரிந்து விட்டது. 


வடையை காலுக்கு கீழே வைத்துக் கொண்டு நான், அழகுதான். நீ புகழ்வது போல பேசி என்னை ஏமாற்ற நினைக்காதே. ஒருவரை புகழ்ந்து பேசி காரியத்தை சாதிப்பது தவறான செயலாகும். மனிதர்களில் கூட இப்படி, சிலர் இருக்கின்றனர். நாம் அவர்களைப் போல் இருக்கக் கூடாது. அவர்களுக்கு உதாரணமாக, முன்மாதிரியாக நாம் நடந்து கொள்ள வேண்டும். உன்னை என் நண்பனாகத்தான் நினைக்கிறேன். நீ கேட்டாலும் கேட்காமல் இவ்வழியே போனாலும் நானே உன்னை கூப்பிட்டு கொடுப்பேன் என்று சொன்னதும், நரி தன் செயலை நினைத்து வெட்கிப்போனது. 


அன்று முதல், தந்திரம் என்கிற தவறான வழியை நரி உடைத்தெறிந்தது. தாத்தா  பாட்டியின் நல்ல நட்பை போல, காகம்  நரியின் நட்பு தொடர்ந்தது.


(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)