உணர்வு
- ஆனந்தி. ச
எப்பொழுதும் பரபரப்பாகவே வாழ்க்கை போய்கொண்டிருப்பதாக தோன்றியது மானசிக்கு. வெள்ளியானால் கேட்கவே வேண்டாம் இன்னும் பரபரப்பு .. காலை வீட்டு வேளைகளிடையே பூஜை செய்யவேண்டும், பள்ளியில் இன்று அவளுடைய சிறப்பு வகுப்பிற்கு காலை 8 மணிக்கே வீட்டை விட்டு கிளம்பினால் மட்டுமே 8 30 மணி அளவில் பள்ளியை அடையமுடியும்.
மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்னதாக அவள் பள்ளியில் இருந்தாக வேண்டும் . இல்லையெனில் அவர்களைப்பார்த்து ,”ஏன் நீ லேட் ? “ எனக்கேட்க முடியாதே?.
பெரும்பான்மையான மாணவர்கள் கரெக்டாக வருவதுண்டு. ஆனால் இந்த நகுல் மட்டும் ஓர் நாள் கூட சிறப்பு வகுப்பிற்கு வரமாட்டான் .
மாலை நேர வகுப்பிற்கோ வாய்ப்பேயில்லை .. மானசி ,வேறு வகுப்பிலிருந்து அவனின் வகுப்பை அடைவதற்குள் , சிட்டாய் பறந்திருப்பான்..
மற்ற பாடவேளையிலும் அவனுடன் ஓயாத போராட்டம்தான் . பேனா கொண்டுவர மாட்டான் . நோட்டோ புக்கோ எதுவுமே வைத்திருக்கமாட்டான் .. தன் வகுப்பில் மட்டுந்தானா? இல்லை அடுத்தவர்கள் வகுப்பிலுமா? என விசாரித்ததில் அவன் பிரம்படிக்கு மட்டுமே பயந்து அடங்குவானென்று .
மானசி கையில் என்றுமே பிரம்பை எடுப்பதில்லை. குழந்தைகள் அனைவரும் மக்கள் தானே மாக்கள் அல்லரே. சட்டென்று சுயநினைவுக்கு வந்தவளாய் காலில் செருப்பை மாட்டி கிளம்பினாள் ஸ்கூலுக்கு. என்ன ஆச்சரியம் இன்று அவளிக்கு முன்னரே வகுப்பிற்கு ஏறும்முன் காணப்படும் படிக்கட்டில் அமர்ந்திருந்த நகுலனோ, மிஸ் ஹாப்பி மார்னிங் என்றபடியே படியிலிருந்து எழுந்தான் .
“என்னடா அதிசயமா இருக்கு இன்னைக்கு ஸ்கூலுக்கு சீக்கிரமா வந்துட்ட ? “ என்றபடியே வகுப்பறைக்குள் சென்று ஹாண்ட் பேகையும் , லஞ்ச் பேகையும் வைத்து நாற்காலியில் படாரென அமர்ந்தபடியே நகுலை பார்த்து கேட்டாள்.
“மிஸ் இன்னைக்கு என் பர்த்டே மிஸ் “ சொன்னதும் இல்லாமல் அவனுடைய பேண்டை துளாவி ஒரு சிறிய சாக்லேட்டை மானசியிடம் நீட்டினான்.
“ஹாப்பி பர்த்துடே டா “- இந்த வருஷத்துலேர்ந்தாவது கடவுள் உனக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும்டா, என்றவளை “
மிஸ் கடவுள் நல்ல புத்திதான் கொடுத்தாரு , நான் தான் மிஸ் பயன்படுத்தல “
ஆச்சிரியத்துடன் அவன் பேசுவதை பார்த்த மானசிக்கு உண்மையிலேயே ஆச்சிரியமாக இருந்தது
மாணவர்கள் ஒருவர் ஒருவராக வர ஆரம்பித்தனர்.
அவர்கள் வர வர அவர்களிடம் சென்று இன்னைக்கு எனக்கு பர்த்டே எனச்சொல்லி வாழ்த்துகளையும் கை குலுக்கல்களையும் வாங்கிக்கொண்டான்.
பள்ளிக்குள் வந்ததுதான் தெரியும் , நேரம் போனதே தெரியவில்லை.. மணி 4 30 ஆகி மீண்டும் சிறப்பு வகுப்பு ஆரம்பம்
நகுலின் வகுப்பிற்கு சென்ற மானசியின் கண்கள் அனிச்சையாக நகுலனைத்தேடியது. பின்னால் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு தாளம் போட்டு ஏதோ பாட்டை பாடி கொண்டிருந்தான்.
“ எல்லாரும் இதை படித்து எழுதிக்காட்டினா வீட்டுக்கு விடுறேன் “. என நகுலனைப்பார்த்தபடியே கூறினாள் மானசி.
“எழுதுறேன் மிஸ் .. கூறியதுடன் படித்து தப்பு தப்பாக எழுதி அவளிடன் நோட்டை நீட்டினான்
நோட்டை வாங்கியவள் நோட்டில் போட்டிருந்த பொயரை பார்த்து நகுலனை முறைத்தாள்.
“ மிஸ் யார் நோட்டா இருந்தா என்ன ? எழுதியிருக்கேன்ல்ல ரைட் போடுங்க .. துரை ஆடர் போட்டார் .
புன்னகைத்தபடியே திருத்திக்கொடுத்தவள் .. புதியதாய் சிலவற்றை தன் அருகிலிருந்து அவனுக்கு புரியும்படி பொறுமையுடன் சொல்லியும் கொடுத்தாள் .
சொன்ன வேலையை செவ்வன செய்பவர்களை உடனுக்குடன் வீட்டிற்கு அனுப்புவது மானசியின் பழக்கம். மூவர் மட்டுமே இருந்த நிலையில் . மணியும் 6 10 ஐ நெருங்கியதால் , நகுலனுடன் இருந்த இருவரையும் வீட்டிற்கு போகச்சொல்லி . பாத்ரூம் போய்விட்டு தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.
வெளியில் சென்று ஆட்டோ பிடிக்கும் எண்ணதில் வந்தவள், ஸ்கூல் கேட்டில் நின்றிருந்த நகுலனை பார்த்தாள்.
..” நீ இன்னும் வீட்டுக்கு போகல? “
உங்க வீடு எங்கிருக்கு? வீட்டு முகவரி சொன்ன நகுலனிடன் .” சரி வா என் கூட ,நான் அந்த பக்கமாதான் போறேன்” ,என்றாள்.
ஆட்டோவில் குறுகி உட்கார்ந்திருந்த அவனிடம் “ டெய்லி எப்படி போவ ? “ எனக்கேட்க , இவ்வளவு நாள் இங்க தான் மிஸ் இருந்தோம் ஸ்கூலுக்கு பக்கத்துல, “ இப்ப எங்கம்மாக்கும் அப்பாக்கும் சண்டயாயிடுச்சா, அதனால் நான், அம்மா அக்கா எங்க ஆயா வீட்டுல இருக்கோம் மிஸ்.” கொஞ்சம் திணறலுடன் சொன்னவனிடம் சிறிதுநேரம் மெளனம்.
“அம்மா என்ன பண்றாங்க?”
“ வீட்டு வேல பாக்குறாங்க “.என்றவனிடம் மெதுவா , பாத்தியா உங்க அம்மா உங்களுக்காக எவ்வளவு கஷ்டப்படுறாங்க ?
நீ ரொம்ப நல்லா படிக்கலேன்னாலும் பரவாயில்ல பாஸ் ஆயிட்டா உங்க அம்மா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க ?
“உனக்கு படிப்பு வராம இல்லை , வரலன்னா கூட உன்னை மக்குன்னு விட்டுடலாம் .. ஆனா நீ தான் நல்லா படிக்கிற ஆனா குறும்பு விளையாடுத்தனம் அதனால உன்னால படிக்க முடியல“ கஷ்டப்படற உங்க அம்மா முகத்த நினைச்சு பாருடா, நீ நல்லா படிக்க ஆரம்பிச்சிருவ ..
“அப்பா அம்மா சண்டையெல்லாம்அவங்க பாத்துபாங்க அதப்பத்தி நீ கவலைப்படாத” சொன்னவற்றை கேட்டு பூம்பூம் மாடு மாதிரி தலையை மட்டும் ஆட்டியவன் .. வாயை மட்டும் திறக்கவே இல்லை .
“மிஸ் இங்கதான் நான் இறங்கணும் என்று சொன்னவன் இறங்கி, பை மிஸ் பார்த்து போங்க போய் நல்லா சாப்பிடுங்க மிஸ் பத்திரம் ! என வாஞ்சையுடன் கூறி இறங்கி மறைந்தே போனான்.
“இவனுக்கு இவ்வளவு பேசத்தெரியுமா? “ திகைத்தபடியே ஆட்டோவின் கண்ணாடி வழியே அவன் சென்ற வழியையே பார்த்து கொண்டிருந்தாள் . சொல்வது அவள் கடமை , கேட்பதும் கேட்காமல் இருப்பதும் ஆட்களை பொறுத்து மாறுபடும்.அவளுக்குள் சொல்லமுடியாத ஓர் உணர்வு .
நிச்சயம் அவனுக்குள் ஓர் உணர்வு மாற்றமாய் வரும் !
(ஆனந்தி ச, பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)