இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, எஸ்பிபி, பாரதிராஜா, பாக்யராஜ்.. மனதை கசக்கிய மரணங்கள்!

Su.tha Arivalagan
Jul 02, 2026,12:26 PM IST

- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்வி


இந்திரா காந்தி ,ராஜீவ் காந்தி என்ற பெரிய ஆளுமைகளின் மரணத்தை தொடர்ந்து ,கொரோனா காலத்தில் நடிகர் விவேக், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களின் மரணங்கள் நம்ப முடியாத அதிர்ச்சியும் வேதனையையும் அளித்தது.


அந்த வரிசையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்ற பன்முக ஆளுமை கொண்ட பாக்கியராஜ் அவர்களின் திடீர் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் தவிக்கிறது. 


அவரின் பெருமைகளை பேசவோ அவர் நடிப்பின் திறமையை பாராட்டவோ எனக்குத் தகுதி இல்லை. எனக்கு அவரின் மனிதம் பிடிக்கும். அவரின்  மேடை பேச்சு பிடிக்கும். அவரின் நகைச்சுவை பிடிக்கும். அவரின் அந்த சிரிப்பு பிடிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு நல்ல மனிதர்  என்ற  ரீதியில்  ஏதோ ஒரு இனம் புரியாத  உணர்வு அவரின் மறைவை நம்ப மறுக்கிறது. 


திரைப்படத் துறையில்  நடிகர் சிவகுமாரை அடுத்து ஒரு நல்ல குடும்பத் தலைவன். அவரின் மனைவி நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் என் மனதை தொட்ட நடிகை. இந்தப் பெரும் இழப்பை தாங்கிக்  கொள்கிற சக்தியை அவருக்கு இந்தப் பிரபஞ்சம் வழங்க வேண்டும்.




போன வாரம் எனக்கு அறம் விருதுகள் வழங்கப்பட்டபோது அவர் கையால் விருது வாங்குகிற அதிர்ஷ்டம் நமக்கு இல்லையே என்று பெரிதும் வருத்தப்பட்டேன்.  அவரின் எளிமையை நினைத்து வியந்தேன். ஏனெனில் கடந்த வருடம் அறம் விருதுகளை அவர்தான் வழங்கினார்.


கனத்த இதயத்துடன் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். 


(சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா ‌ போன்ற 30 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்)