அச்சச்சோ.. ஆமாங்க இப்ப தாங்க வலிக்குது.. தங்கமே தங்கம்!
- க. முருகேஸ்வரி
தங்கம் விலை உயர்வு.. அப்படின்னு ஒரு செய்தி படிச்சப்போ எனக்கு என்னோட கணக்கு வாத்தியார் ஞாபகத்திற்கு வந்தார். அந்தக் கதையை உங்க கிட்ட சொல்றேன்.. நீங்களும் கேட்டு ரசிங்க.
அது ஒரு மதிய நேரம். கணக்கு பாடம் என்றாலே பலருக்கும் தூக்கம் வரும் நேரம். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஜியோமெட்ரி (Geometry) தேற்றங்களால் மண்டை காய்ந்து போயிருந்தோம். எங்கள் கணித ஆசிரியர், மாணவர்களின் சோர்வை சட்டென்று கவனித்துவிட்டார்.
"சரி... கணக்கை கொஞ்சம் ஓரமா வைங்க. உங்களுக்கு ஒரு கதை சொல்றேன்," என்றார். வகுப்பறையே சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தது.
அந்த பேராசைக்கார மனைவி "ஒரு ஊர்ல ஒரு தம்பதி இருந்தாங்களாம். மனைவிக்குத் தங்கம்னா உயிர். ஆனா, எவ்வளவு நகை வாங்கிக் கொடுத்தாலும் அந்த அம்மாவுக்குத் திருப்தியே வராதாம். 'அண்டை வீட்டு அலமேலு அஞ்சு சவரன்ல ஆரம் போட்டிருக்கா, எதிர் வீட்டு ஈஸ்வரி எட்டு சவரன்ல இடுப்புப் பட்டி போட்டிருக்கா... எனக்கு மட்டும் ஏன் சின்னச் சின்னதா வாங்கித் தர்றீங்க?'ன்னு தினமும் ஒரே புலம்பல்."
வகுப்பில் இருந்த பெண் பிள்ளைகள் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரிக்க, ஆசிரியர் தொடர்ந்தார்.
"அந்த மனுஷன் யோசிச்சாரு. இவளைத் திருப்திப்படுத்த தங்கம் மட்டும் பத்தாது, அளவும் பெருசா இருக்கணும்னு முடிவு பண்ணாரு. ஒரு நாள் வீட்டுக்கு வரும்போது, ஒரு பெரிய பொட்டலத்தை தூக்க முடியாம தூக்கிட்டு வந்தாரு.
மனைவி ஆசையா பிரிச்சுப் பார்த்தா... ஆச்சரியத்துல கண்ணே போயிடுச்சு! அவ கழுத்து அகலத்துக்கு ஒரு பிரம்மாண்டமான 'நெக்லஸ்'. தகதகன்னு தங்கம் மின்னுது. "அதை அந்த அம்மா ஆசையா கழுத்துல போட்டுக்கிட்டு கண்ணாடி முன்னாடி நின்னு அழகு பார்த்தாங்களாம். கணவன் மெதுவா கேட்டாராம், 'என்னம்மா... கழுத்து எதுவும் வலிக்கலையே?'
அந்த அம்மா சந்தோஷத்துல, 'அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க... தங்கம்னா அஞ்சாறு கிலோ இருந்தா கூட எனக்கு வலிக்காது'ன்னு பெருமையா சொன்னாங்களாம்.
கணவன் சிரிச்சுக்கிட்டே சொன்னாராம், 'அடிப்பாவி... அது வெறும் தங்கம் இல்லடி, உள்ள இருக்கிறது அம்மி குழவி. அது அவ்வளவு கனம்!' அப்படின்னு உண்மையைச் சொன்னாராம்.
அவ்வளவுதான்! அதுவரைக்கும் வலிக்காத கழுத்து, 'அம்மி குழவி'ன்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷமே... 'ஐயோ! ஆமாங்க... இப்பத்தான் வலிக்குது... கழுத்தே ஒடிஞ்சுடும் போல இருக்கே' அப்படின்னு கத்த ஆரம்பிச்சுட்டாங்களாம்!"
ஆசிரியர் கதையை முடித்ததும் வகுப்பே சிரிப்பால் அதிரும். அவர் உடனே கரும்பலகையில் ஒரு கோடு கிழித்துச் சொல்வார்:
"மனசுதான் எல்லாத்துக்கும் காரணம். அது தங்கம்னு நினைச்ச வரைக்கும் பாரம் தெரியல, கல்னு தெரிஞ்சதும் வலிக்குது. கணக்கும் அப்படித்தான்... கஷ்டம்னு நினைச்சா பாரமா இருக்கும், பிடிச்சுப் போட்டா தங்கம் மாதிரி இனிக்கும்!"
அந்த ஒரு குட்டி கதைக்கு அப்புறம், அன்னைக்கு ஜியோமெட்ரி கிளாஸ் யாருக்குமே கஷ்டமா தெரியல.
(க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வயலாநல்லூர், பூவிருந்தவல்லி)