ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
டெல்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி ஆகிவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு எனப்படும் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. இந்த ஜி.எஸ்.டி. 4 அடுக்குகளை கொண்டிருந்தது. அதன்படி 5%, 12%, 18% மற்றும் 28% என 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டு தற்போது 8 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்த ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து, வெறும் 5% மற்றும் 18% அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் வரி விகிதம் மாற்றப்பட்டுள்ளது.இந்த ஜி.எஸ்.டி. குறைப்பு கடந்த மாதம் 22-ந் தேதி அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் குறித்து டெல்லியில் இன்று மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் மற்றும் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் ஆகியோர் கூட்டாக இணைந்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏசி, வாஷிங் மெஷின்,டிவி விற்பனை அதிகரித்துள்ளது. நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டன. அரசு தினசரி பயன்படுத்தும் 54 பொருட்களை உன்னிப்பாக கண்காணித்து வந்தது. இந்திய மக்கள் அதனை ஏற்றுக்கொண்டதாக நான் உணர்கிறேன்.
பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு வழங்கப்பட்டு விட்டது. வரிச்சலுகையால் நுகர்வோர் பலன் அடைந்து வருகின்றனர். பொது மக்களின் நலன் கருதி மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. ஆட்டோ மொபைல் துறையில் விற்பனை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தற்சார்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.