டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம்: குற்றவாளிகள் தப்ப முடியாது: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

Su.tha Arivalagan
Nov 11, 2025,05:06 PM IST

டெல்லி: டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய யாரும் தப்ப முடியாது. குற்றவாளிகள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.


டெல்லி செங்கோட்டை அருகே நேற்று சாலையில் நின்று கொண்டிருந்த கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 12 பேர் பலியாயினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.




இது குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், நேற்று நடந்த துயரச்சம்பவத்தில் பலியான அனைவருக்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு வலிமையும் தைரியத்தையும் அளிக்க கடவுளிடம் வேண்டுகிறேன்.


டெல்லி சம்பவத்திற்கு காரணமானவர்கள் எந்த சூழ்நிலையிலும் தப்பிக்க விடமாட்டோம். டில்லி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாட்டின் முன்னணி விசாரணை அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மக்கள் அமைதி காக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்  என்று தெரிவித்துள்ளார்.