யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் ரிசல்ட் ...இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து மதுரை பெண் சாதனை
மதுரை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய 2025-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
958 பேர் பரிந்துரை :
இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS) மற்றும் இந்திய வெளியுறவுப் பணி (IFS) உள்ளிட்ட உயரிய சிவில் சர்வீஸ் பதவிகளுக்காக இந்தத் தேர்வுகள் நடத்தப்பட்டன. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வில், பல்வேறு கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு மொத்தம் 958 பேர் பணி நியமனத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை பெண்ணின் இமாலய சாதனை :
இந்த ஆண்டு வெளியான முடிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமான இடங்களைப் பிடித்துள்ளனர். குறிப்பாக, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி, அகில இந்திய அளவில் 2-ஆம் இடத்தைப் பிடித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்து, கடின உழைப்பால் நாட்டின் மிக உயரிய தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த ராஜேஸ்வரிக்கு தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் முடிவுகளைச் சரிபார்த்துக் கொள்ளலாம். வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.